பள்ளிப்படிப்பில் மாணவர்கள் மிகவும் கடினமான பாடம் என்று எதை சொல்வார்கள் என்றால், அவர்களின் முதல் பதிலாக கணக்குதான் இருக்கும். நாம் வாழ்க்கை முழுவதும் கணிதம் நம்முடன் ஏதோ ஒரு விதத்தில் பயணித்துக் கொண்டுதான் இருக்கும்.
அப்பேற்பட்ட கணித பாடத்தை மாணவர்கள் எளிதில் கற்றுக்கொள்ள கீழே உள்ள நடைமுறைகளை பின்பற்றவும்.
• வாய்ப்பாடுகளை எளிய முறையில் கற்பிக்க தரையில் கட்டங்கள் வரைந்து குதிக்க செய்தோ அல்லது பொருட்களை பிரித்து அடுக்கி காண்பித்தோ கற்று கொடுக்கலாம். இதுபோன்ற செயல்முறை விளக்கங்களின் மூலம் அவர்களுக்கு இயல்பாகவே கணிதத்தின் மீது ஆர்வம் ஏற்படும்.
• கணிதத்தின் அடிப்படை விதிகளையும், சூத்திரங்களையும் தெளிவாக தெரிந்து வைத்து கொண்டால் உயர்கல்வி வகுப்புகளில் தடுமாற வேண்டி இருக்காது. அல்ஜீப்ரா, கால்குலஸ் போன்ற கணித பிரிவுகள் சில அடிப்படை கோட்பாடுகள் மற்றும் தேற்றங்களை கொண்டே அமைக்கப்பட்டிருக்கும்.
• கணித வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது மிகுந்த சிரத்தையுடன் கவனச்சிதைவின்றி இருத்தல் அவசியம். சந்தேகம் இருப்பின் அவ்வப்போது நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
கணிதத்தில் கீழே உள்ள முறைகளில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.
• புரிந்து கொள்ளுதல்.
• புரிந்து கொண்டதை வெளிப்படுத்துதல்.
• கற்றுக்கொண்டதை பயன்படுத்துதல்.
• மீண்டும் நினைவுப்படுத்தி பார்த்தல்.
கணிதத்தில் பெரும்பாலும் நிகழ்பவை கவன குறைவான தவறுகள் தான். ஒவ்வொரு கணக்கையும் முடித்துவிட்டு ஓரிரு நிமிடங்கள் சரிபார்ப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை போக்கலாம்.
அடிப்படைகளை கற்றல், வழிமுறைகளை சரியாக புரிந்து கொள்ளுதல், பயிற்சி செய்தல், கவன குறைவால் ஏற்படும் தவறுகளை சரி செய்தல் இதுவே கணக்கு கற்றலின் சூட்சுமம் ஆகும். இதனை அறிந்தால் கணக்கு கண்கட்டி வித்தையாக தோன்றாது.