ஆரோக்கியம் நிறைந்த உணவு வகைகளை அளவாக உட்கொண்டால் உடல்நல பாதிப்பின்றி வாழ்நாள் முழுக்க மகிழ்ச்சியாக வாழலாம். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வில் சிலவகை மீன் மற்றும் வால்ந்ட்களில் உள்ள இருவகை காம்பவுண்ட்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சால்மன் போன்ற மீனில் உள்ள ஒமேகா -3 ஈகோசாபென்டெனோயிக் அமிலம் (இபிஏ) மற்றும் வால்நட் போன்ற தாவர உணவுகளில் காணப்படும் ஆல்பா-லினோலெனிக் அமிலம் (ஏஎல்ஏ) நிறைந்த உணவுகளை உட்கொள்பவர்களுக்கு மாரைடைப்புக்கு பிறகு ஏற்படும் இறப்பு அபாயம் குறைவு என சமீபத்திய ஆய்வு முடிவுகள் கூறுகிறது.
இதயத்திற்கு போதுமான இரத்த ஓட்டம் இல்லாத நிலையிலேயே ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. மனிதர்களுக்கு மாரடைப்பு மிகவும் அபாயகரமான பிரச்சினை எனலாம். சமயங்களில் இது ஒருவரின் உயிரையே பறிக்கும் வகையில் ஆபத்தானது ஆகும்.
மாரடைப்பு ஏற்பட்டால் அறுவை சிகிச்சை, ஸ்டென்ட் போன்ற சிகிச்சை முறை அல்லது வாழ்நாள் முழுக்க டயட் மற்றும் வாழ்க்கைமுறை மாற்றம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்க இதய அமைப்பு பரிந்துரையின் படி மீன் மற்றும் நட்ஸ் அடங்கிய உணவுகளை உட்கொண்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என தெரிவிக்கிறது.
Also Read: இதயத்தை பத்திரமாக பாத்துக்க இதை மட்டும் செய்தால் போதும்!
மீன் மற்றும் நட்ஸ்களில் உள்ள ஒமேகா 3-யின் வகைகள் (Eicosapentaenoic acid (EPA) and alpha-linolenic acid (ALA) ) மாரடைப்புக்கு பிந்தைய இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கும் தன்மை கொண்டுள்ளது. மீன் மற்றும் நட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக உட்கொள்ளும் போது நல்ல பலன் கிடைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்து உள்ளது.