Monday, March 27, 2023
HomeLifestyleHealthமுட்டை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்.. அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான்!

முட்டை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்.. அப்போ இந்த கட்டுரை உங்களுக்கு தான்!

முட்டை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க பெரும்பாலானோர் பலவிதங்களில் சமைத்து சாப்பிடும் உணவாக முட்டை இருக்கிறது. ஆப் பாயில், புல் பாயில், ஆம்லெட், ஒன் சைடு ஆம்லெட், கலக்கி, பொடிமாஸ் என முட்டையில் எண்ணற்ற ரெசிபிகள் உண்டு.

முட்டையில் அதிகளவு புரோடீன், வைட்டமின், மினரல்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடண்ட்கள் நிறைந்துள்ளன.

முட்டை மற்றும் நீரிழிவு

முட்டை சாப்பிடுவதற்கும் நீரிழிவு ஏற்படுவதற்கும் அதிக தொடர்பு இருப்பதாக கருத்து நிலவுகிறது. முட்டை சாப்பிடுவதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கணிசமாக அதிகரிக்கும் என வல்லுநர்கள் தெரிவித்து இருக்கின்றனர். இது பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் British Journal of Nutrition இதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த ஆய்வு 1991 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் நடத்தப்பட்டது. இதில் தினமும் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட முட்டைகளை சாப்பிடுவோரிடம் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் தினமும் 50 கிராம் முட்டை சாப்பிடுவோருக்கு நீரிழிவு நோய் ஏற்பட 60 சதவீதம் வாய்ப்புகள் அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டு உள்ளது.

மேலும் தினமும் 38 கிராம் முட்டை சாப்பிட்டாலும் நீரிழிவு ஏற்படும் அபாயம் 25 சதவீதம் அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் அன்றாடம் முட்டை சாப்பிட்டால் நீரிழிவு ஏற்படும் அபாயம் அதிகம் என தெரிகிறது.

முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் பிற பாதிப்புகள்

முட்டை சாப்பிடுவதால் நீரிழிவு ஏற்படுவதை ஆய்வுகள் உணர்த்தி உள்ள போதும் வேறு பாதிப்புகளும் ஏற்படுகிறது. அந்த வகையில் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாது என அமெரிக்க இதயவியல் அமைப்பு தெரிவித்து இருக்கிறது.

எனினும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் இதயம் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். சில ஆய்வுகளில் அளவுக்கு அதிகமாக முட்டை சாப்பிட்டால் குடலில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன.

ஒரே நாளில் அதிகளவு முட்டைகளை சாப்பிட்டால் உடலில் அதிக சூடு ஏற்படும். இதனால் செரிமான குறைபாடு ஏற்படுவதோடு கட்டிகளும் ஏற்படலாம்.

முட்டையை சமைக்காமலோ அல்லது பாதி வேக வைக்கப்பட்ட நிலையில் சாப்பிடும் போது டையபாய்டு காய்ச்சல் மற்றும் தீவிரமான செரிமான கோளாறை ஏற்படுத்தும். இது கருவுற்ற பெண்களுக்கு மிகவும் ஆபத்தான உணவு ஆகும்.