உடலுக்கு தீமையை ஏற்படுத்தும் பழக்கவழக்கங்களை கைவிடுதலுக்கு எல்லா நேரமும் நல்ல நேரம் தான். அந்த வகையில் உங்களது சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சில பழக்கவழக்கங்களை பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
வலி நிவாரணிகளை அதிகம் எடுத்துக் கொள்வது
உடலில் ஏற்படும் வலிகளை குறைக்கும் மருந்து மாத்திரைகள் (NSAIDs – nonsteroidal anti-inflammatory drugs) உங்களை அவஸ்தையில் இருந்து விடுவித்தாலும், இவை சிறுநீரகத்தை பெரிதும் பாதிக்கும் தன்மை கொண்டுள்ளன. தவிர ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு கொண்டவர்களுக்கு இது பேராபத்தை விளைவிக்கும். இதனால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் NSAID ரக மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
உப்பு உட்கொள்வது
உடலுக்கு தேவையானதைவிட அதிகளவு உப்பு அடங்கிய உணவு வகைகளை உட்கொள்ளும் போது உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இது சிறுநீரகத்தை பாதிக்கும். அதிக உப்பு சேர்ப்பதற்கு மாற்றாக மூலிகை மற்றும் மசாலா வகைகளை சேர்த்து கொள்ளலாம். நாளடைவில் உப்பு அதிகம் உட்கொள்ளும் வழக்கம் தானாக குறைந்துவிடும்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது
அதிக நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க பதப்படுத்தப்படும் உணவு வகைகளில் அதிகளவு சோடியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. சிறுநீரக பாதிப்பு கொண்டவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறுநீரக பாதிப்பு இல்லாதவர்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்ளும் போது சிறுநீரகம் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
போதுமான நீர் குடிக்காமல் இருப்பது
உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் சிறுநீரக கோளாறு ஏற்படும். அதிக வலி ஏற்படுத்தும் சிறுனீரக கல் பிரச்சினையை தவிர்க்க அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏற்கனவே சிறுநீரக கோளாறு பிரச்சினை உள்ளவர்கள் அதிக நீர் ஆகாரம் எடுத்துக் கொள்ள வேண்டும். நாள் ஒன்றுக்கு 1.5 முதல் 2 லிட்டர் வரை நீர் குடிக்க வேண்டும்.
உறக்கமின்மை
இரவு நேரத்தில் சரியாண உறக்கம் அனைவருக்கும் அவசியம் தேவை. இரவு நேர உறக்கத்தின் போது சிறுநீரக இயக்கம் சீராக இருக்க தேவையான பணிகளை மேற்கொள்ளும்.
அதிக இறைச்சி உட்கொள்வது
புரோடீன் நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்வது சிறுநீரகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். சிலவகை இறைச்சிகளை சிறுநீரகம் வேகமாக வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும். உடலின் அனைத்து பாகங்களுக்கும் புரோடீன் மிகவும் அவசியமானது. எனினும், இதில் காய்கறி, பழ வகைகள் என அனைத்தும் சம அளவு அடங்கிய உணவு பழக்கவழக்கம் சிறுநீரக கோளாறு ஏற்படுவதை தவிர்க்க செய்யும்.
சர்க்கரை அதிகம் நிறைந்த உணவுகள்
உடல் பருமன் ஏற்பட முக்கிய காரணியாக சர்க்கரை இருக்கிறது. அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை உட்கொள்ளும் போது இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஏற்படும். இவை இரண்டு உடலில் சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதனால் இனிப்பு பலகாரங்களை தவிர்ப்பது நல்லது. இதில் இனிப்பு வகைகள் மற்றும் குளிர்பானங்களும் அடங்கும்.
புகைப்பழக்கம்
புகைப்பழக்கம் இதயம் மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவைதவிர புகைப்பழக்கம் சிறுநீரகத்தையும் பாதிக்கும். புகைப்பவர்களின் சிறுநீரில் புரோடீன் அடங்கி இருக்கும். இதனால் நாளடைவில் அவர்களது சிறுநீரகம் பாதிக்கப்படும்.
மதுப்பழக்கம்
தொடர்ந்து அதிகளவு மது உட்கொள்வது சிறுநீரக பாதிப்பை விரைவில் ஏற்படுத்தும். இதுதவிர மதுவுடன் புகைப்பழக்கம் கொண்டவர்களுக்கு ஆபத்து மேலும் தீவிரமாக இருக்கும். வழக்கமாக புகை மற்றும் மது பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடும் போது, இரண்டு பழக்கத்தையும் அதிகம் கொண்டவர்களுக்கு ஐந்து மடங்கு வேகமாக சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.
உட்கார்ந்தே இருப்பது
தற்சமயம் அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பதும் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டு உள்ளது. உடல் உழைப்பின்மை எவ்வாறு சிறுநீரக கோளாறை ஏற்பரடுத்துகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் இதுவரை துல்லியமாக கண்டறியவில்லை. எனினும், உடலுழைப்புக்கும் இரத்த அழுத்தத்தம் மற்றும் குளுகோஸ் மெட்டபாலிசத்திற்கும் அதிக தொர்பு இருக்கின்றன. இவை இரண்டும் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானவை ஆகும்.