Saturday, March 25, 2023
HomeLifestyleசுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி முட்டை செய்வது எப்படி...?

சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி முட்டை செய்வது எப்படி…?

அசைவ உணவுகளை தினமும் செய்ய முடியாவிட்டாலும் அசைவ உணவுகளுக்கு இணையாக முட்டையை விதம், விதமாக சமைத்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். உணவகங்களில், நட்சத்திர விடுதிகளில் முட்டையை வைத்து வித, விதமாக சமைத்து வாடிக்கையாளர்களை குஷிப்படுத்துகிறார்கள்.
அந்த வகையில் உணவகங்கள் மற்றும் விடுதிகளில் நமக்கு செய்து தரப்படும் சில்லி முட்டையை வீட்டிலே செய்வது எப்படி என்று கீழே காணலாம். இந்த சைனீஸ் உணவை வீட்டில் குழந்தைகளுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்:

* வேக வைத்த முட்டை – 4
* எண்ணெய் – 1 டீஸ்பூன் + பொரிப்பதற்கு தேவையான அளவு
* பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* சர்க்கரை – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் – சிறிது (பொடியாக நறுக்கியது) மாவிற்கு…
* மைதா – 1/2 கப்
* சோள மாவு – 1/2 கப்
* பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு சாஸ் செய்வதற்கு…
* தக்காளி கெட்சப் – 3 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் – 1 1/2 டீஸ்பூன்
* வினிகர் – 1 1/2 டீஸ்பூன்
* சில்லி கார்லிக் சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
* க்ரீன் சில்லி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்

எப்படி செய்வது..?

முதலில் ஒரு பவுலில் சாஸ் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வேக வைத்த முட்டைகளை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, பேக்கிங் பவுடர், சுவைக்கேற்ப உப்பு மற்றும் நீர் சேர்த்து சற்று கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.

அதன்பின்பு, பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொதிக்க வேண்டும். முட்டை துண்டுகளை எடுத்து மாவில் கலந்து, கொதித்த எண்ணெயில் பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, இஞ்சி சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக மாறும் வரை வதக்க வேண்டும். அதில் குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தயாரித்து வைத்துள்ள சாஸ், மிளகாய் தூள், மிளகுத் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் பொரித்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து, ஏற்கனவே நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு கிளறி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சில்லி முட்டை தயார். இந்த உணவை சமைச்சு சாப்பிட்டு எஞ்சாய் பண்ணுங்க..