இன்றைய நவீன காலத்தில் ஆபாசப்படங்கள் பார்ப்பது என்பது சர்வசாதரண ஒரு விஷயமாக மாறிவிட்டது. வயது வித்தியாசமின்றி பலரும் பார்க்கின்றனர். உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 42 சதவீத மக்கள் ஆபாச படங்கள் பார்க்கின்றனர். சமீபகாலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆபாச படங்கள் பார்ப்பதாக தகவல்கள் வெளிவருகிறது.
அளவுக்கு அதிகமாக ஆபாச படங்களை பார்த்து, அதில் இருந்து மீண்டு வர முடியாவிட்டால் நமது அன்றாட வாழ்வில் நாம் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். ஆபாச படங்களை பார்க்காமல் இருப்பதும், அதை தவிர்ப்பதும் மிகவும் கடினமான காரியம் இல்லை. மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தினால் எளிதில் கடந்து வரலாம். ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்ப்பதன் மூலம் உங்கள் அந்தரங்க வாழ்க்கை எந்தளவு இனிக்கும் என்று தெரியுமா..?
தாம்பத்ய வாழ்க்கை இனிக்கும்:
நீங்கள் ஆபாச படத்தை பார்ப்பதை தவிர்ப்பதன் மூலம் இயற்கையான உறவில் இனிப்பான அனுபவம் உண்டாகும். உங்கள் துணையுடனான உடலுறவில் அதிக இன்பத்தை அடைவீர்கள். ஆபாச படத்தில் வருவது போல உங்கள் துணையிடம் எதிர்பார்ப்பது உங்கள் பாலியல் வாழ்க்கையை சீரழிக்கும். இது உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையே இடைவெளியை உருவாக்குகிறது.
ஆற்றல் அதிகரிக்கும்
ஆபாசப்படங்களைப் பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் உங்களுக்கு சுய இன்பம் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இது கட்டுப்பாடில்லாமல் போகும்போது நீங்கள் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். சுய இன்பம் மற்றும் ஆபாச படம் பார்ப்பதை கைவிடுவது மூலம் மனதில் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும். எந்தவொரு செயலையும் முழு ஆற்றலுடன் செய்து முடிப்பீர்கள். துணையுடன் உறவில் ஈடுபடும்போதும் முழு உத்வேகத்துடன் காணப்படுவீர்கள்.
சுய கட்டுப்பாடு:
நம் மனதை அலைபாய வைப்பதில் ஆபாச படத்திற்கு தனிப்பங்கே உண்டு என்று கூறலாம். அதை பார்ப்பதை தவிர்ப்பதன் மூலம் நம் மனதை நாம் கட்டுப்படுத்தலாம். வேறு சில செயல்கள் மீது நாம் முழு ஈடுபாட்டுடன் கவனம் செலுத்தலாம். உங்கள் சுய கட்டுப்பாடு அதிகரிக்கும்போது நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுவீர்கள்.
நேர விரயம் தவிர்க்கப்படும்:
ஆபாச படங்கள் பார்ப்பதன் மூலம் உங்கள் நேரத்தை நீங்கள் வீணாக்குவதை தவிர்க்க முடியும். சில சமயங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதற்காக பலரும் தனிமையில் ஒரு நாள் பொழுதையே வீணாக்குகின்றனர். அதை தவிர்ப்பதன் மூலம் உங்கள் பொன்னான நேரத்தை உங்கள் வாழ்வை மாற்றும் விஷயங்களில் செலுத்தலாம்.
பெண்கள் மீதான கண்ணோட்டம்:
அளவுக்கு அதிகமான ஆபாச படங்கள் பார்ப்பதில் நமது எண்ணம் தவறான பாதைக்கு செல்வதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக, ஆபாச படங்களில் மூழ்கித் திளைப்பவர்களுக்கு பெண்கள் மீதான தவறான கண்ணோட்டம் உண்டாக வாய்ப்புகள் அதிகளவில் உண்டு. இதைத்தவிர்ப்பதன் மூலம் பெண்கள் மீதான நமது கண்ணோட்டம் மாறுபடும். இது சக பெண்களுக்கு உங்கள் மீதான நன்மதிப்பை அதிகரிக்கச் செய்யும்.
ஆபாச படங்களை பார்ப்பவர்கள் அல்லது அதிக நேரத்தை ஆபாச படங்களுக்காக செலவிடுபவர்கள் இனிமேல் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வந்தால் நீங்கள் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அதில் கவனம் செலுத்தலாம்.