உலகில் அதிவேகமாக தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா தவிர்க்க முடியாத இடத்தில் உள்ளது. இணைய வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் நிறுவனங்களின் முக்கிய வியாபார சந்தையாகவும் இந்தியா உள்ளது. இன்றைய நிலையில், ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை சொற்ப அளவிலே உள்ளது என்று கூறலாம். அந்தளவிற்கு செல்போன்களும், இணைய வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. வை-பை வசதிகளும் குக்கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது. சில இடங்களில் இணைய தேவைக்காக பலர் ப்ரீ வை-பை சேவையை பயன்படுத்துகின்றனர். அதில் ஆபத்துக்களும் உள்ளது. அதைப் பற்றி கீழே விரிவாக காணலாம்.
என்னென்ன ஆபத்துக்கள்?
இலவச வை-பையை பயன்படுத்தி உங்கள் மொபைல் போனில் நீங்கள் இணையத்தை பயன்படுத்துவதன் மூலம் ஹேக்கர்ஸ்கள் உங்களது செல்போனை ஹேக் செய்யும் அபாயம் உள்ளது. இணைய வசதிகள் குறித்து அதிகளவில் தெரிந்து வைத்திருக்கும் ஹேக்கர்ஸ்கள் இலவச வை-பை கிடைக்கும் இடங்களை எல்லாம் தெரிந்து வைத்துள்ளனர். இதன்மூலம், அந்த இடங்களில் உள்ள வை-பை வசதிகளில் ஊடுருவி அதை பயன்படுத்துபவர்களின் செல்போன்களை ஹேக் செய்கின்றனர்.
ஹேக் செய்யப்படும் செல்போன்களில் இருந்து அவர்களுக்கு தேவையான தரவுகளை எடுத்துக்கொள்கின்றனர். அதில் உங்களது வங்கிக்கணக்கு எண், முக்கிய எண்கள், புகைப்படங்கள், உங்களது தனிப்பட்ட விவகாரங்கள், சாட்கள் ஆகியவையும் அடங்கும். இதனால், நாம் பல இன்னல்களை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் நம்மை ஹேக்கர்கள் ப்ளாக்மெயில் செய்யவும் வாய்ப்புள்ளது.
தவிர்ப்பது நல்லது
அரசு சார்பில் ரயில் நிலையங்கள் உள்பட பொது இடங்களில் இலவச வை-பை வசதிகள் அளிக்கப்படுகின்றன. போதிய பாதுகாப்பு அம்சங்களுடனே இந்த சேவைகள் வழங்கப்பட்டிருக்கும். இருப்பினும் உங்களுக்கு தேவைகள் இருந்தால் மட்டுமே இதுபோன்ற வை-பை வசதிகளை பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் தவிர்த்துவிடுங்கள். அதேபோல, தெரியாத நபர்களின் வை-பை வசதிகளை பயன்படுத்துவதையும் தவிர்த்துவிடுங்கள்.
தனியுரிமை விவகாரத்தில் வீண் சிக்கல்களில் சிக்கிக்கொள்வதை தவிர்த்துவிடுங்கள்.