பணியாளர்களின் மாநில இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பதே இ.எஸ்.ஐ. ஆகும். ஊழியர்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்கான திட்டங்களை செயல்படுத்தும் ஒரு மத்திய அரசின் அமைப்பாகும்.
யாரெல்லாம் தகுதியானவர்கள்:
10 முதல் 20 ஊழியர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்திற்கு இ.எஸ்.ஐ. சேவைகளை வழங்குகிறது. இது மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. இ.எஸ்.ஐ. பணியாளர்களுக்காக நாட்டில் 154 இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் செயல்படுகின்றன. இது தவிர 1570 மருந்தகங்கள் செயல்படுகின்றன.
இ.எஸ்.ஐ. திட்டத்தின் பலனை பெறுவதற்கு பணியாளர்கள்/பயனாளிகள் மாத ஊதியம் ரூ.21,000 வரையும், மாற்றுத்திறனாளி ஊழியர்களுக்கு மாதம் ரூ.25,000 வரை என அவர்களின் சம்பள வரம்பு இருக்க வேண்டும்.
பதிவு செய்வது எப்படி?
இத்திட்டத்தில் பதிவு பெற்றுள்ள தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதை தொடர்ந்து, தொழிலாளி ஒவ்வொருவரும் தன் விவர அறிவிப்பு படிவத்தை பூர்த்தி செய்து குடும்ப புகைப்படத்துடன் கொடுக்க வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒரு காப்பீட்டு அடையாள அட்டை அளிக்கப்படுகிறது. ஒரு நபர் காப்பீடு பெற்றுள்ள வேலையில் ஒரு முறை பதிவு செய்தால் மட்டுமே போதுமானது.
பணியாளர்களாகிய நாமும், நிறுவனங்களும் இ.எஸ்.ஐ.க்கு பங்களிக்கின்றனர். பங்களிப்புத் தொகை அவ்வப்போது மாற்றப்படும். தற்போது, பணியாளரின் சம்பளத்தில் இருந்து 0.75 சதவீதமும், முதலாளியின் பங்களிப்பில் இருந்து 3.25 சதவீதமும் செலுத்தப்படுகிறது.
இ.எஸ்.ஐ. மூலம் நாம் பல நன்மைகளை பெற முடியும். நமது மருத்துவ தேவைகளுக்கு இ.எஸ்.ஐ. முக்கிய பங்கு வகிக்கிறது.