சென்னை : இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு நடிகர் விஜய் சேதுபதிக்கு முரளிதரன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அதற்கு பதில் கொடுத்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். உலகின் மிகசிறந்த பவுலர்களில் இவரும் ஒருவர். இவர் மொத்தம் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார். சமீபத்தில் இவருடைய வாழ்கை வரலாறு, திரைப்படமாக வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்புக்கு பிறகு பல்வேறு தமிழ் அமைப்புகள் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்தில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இயக்குனர் பாரதிராஜா, அமீர், மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். முரளிதரன் விடுதலை புலிகளுக்கு எதிராக பேசி இருக்கிறார், இலங்கையில் போர் நடைபெற்ற சமயங்களில் ஈழத்தமிழர்களுக்கு உதவவில்லை என கூறி பல்வேறு தரப்பினரும் நடிகர் விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால் நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து எந்த கருத்தும் கூறாமல் மவுனமாகவே இருந்து வந்தார். இதற்கிடையே இந்த சர்ச்சை தொடர்பாக முத்தையா முரளிதரன் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் தன் தரப்பு நியாயத்தையும் முரளிதரன் விளக்கியிருந்தார். போர் நடைபெற்ற சமயத்தில் ஈழ தமிழர்களுக்கு அவர் எவ்வளவு உதவியிருந்தார் என்றும், போர் சூழலில் வாழும் ஒரு சராசரி மனிதனுக்கு மட்டுமே தெரியும் போர் முடிவுக்கு வருவது எத்தனை பெரிய நிம்மதி என்று, அதன் காரணமாகவே தாம் போர் முடிவடைந்த ஆண்டு மகிழ்ச்சியானது என கூறியிருந்ததாகவும் விளக்கம் கொடுத்திருந்தார். மேலும் இலங்கையில் பிறந்தது என் தவறா என்றும் அந்த அறிக்கையில் முரளிதரன் கேள்வி எழுப்பியிருந்தார் .
இருந்தபோதிலும் விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே சென்றது. தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு விஜய் சேதுபதி மதிப்பளிக்க வேண்டும் எனவும் பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில் தான் இன்று திடீரென முத்தையா முரளிதரன்மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் . அதில் நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 800 திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அந்த அறிக்கையில் முரளிதரன் கூறுகையில் என் மீதுள்ள தவறான புரிதலால் 800 திரைப்படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். என்னால் தமிழ்நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை.அது மட்டுமல்லாது விஜய் சேதுபதியின் கலை பயணத்திற்கு வரும் காலங்களில் தடை எதுவும் ஏற்பட்டுவிட கூடாது என்பதையும் கருத்தில் கொண்டு இத்திரைப்படத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கிறேன் என முரளிதரன் கூறியிருக்கிறார்.
முரளிதரனின் இந்த அறிக்கையை பதிவிட்டு நடிகர் விஜய் சேதுபதி நன்றி வணக்கம் என ட்வீட் போட்டுள்ளார். விஜய் சேதுபதியின் இந்த ட்வீட் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் சேதுபதி இத்துடன் இந்த சர்ச்சை முடிவுக்கு வருவதாக கூறியிருக்கிறார். தன்னுடைய ட்வீட்க்கு அதுதான் அர்த்தம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் 800 திரைபடத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகுவது உறுதியாகியுள்ளது.
நன்றி.. வணக்கம் 🙏🏻 pic.twitter.com/PMCPBDEgAC
— VijaySethupathi (@VijaySethuOffl) October 19, 2020