தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுந்தர்.சி. காமெடி திரைப்படங்களை இயக்குவதில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை என்ற அளவிற்கு இவர் நகைச்சுவை வகையறாவில் ஒரு வித்தகர். அதற்கு இவர் இயக்கிய முறைமாமன் முறைமாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உள்ளம் கொள்ளை போகுதே, வின்னர், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு ஆகிய படங்களின் வெற்றியே மிகப்பெரிய உதாரணம்.
அரண்மனை
இன்றவும் இந்த படங்களை பார்த்தால் சலிக்காமல் சிரித்துக் கொண்டே இருக்கலாம். அந்த வகையில் 2014ம் ஆண்டு வினய், லட்சுமி ராய், சந்தானம், கோவை சரளா, மனோபாலா, ஆண்ட்ரியா, ஹன்சிகா ஆகியோருடன் தானும் இணைந்து நடித்து இயக்கிய படம்தான் அரண்மனை. பேய், திரில், அரண்மனை, காமெடி ஆகிய அம்சங்களுடன் இணைந்து உருவாகிய இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.
ஆனால், 2016ம் ஆண்டு அதே கதையை கொஞ்சம் மாற்றி சித்தார்த், திரிஷா, ஹன்சிகா ஆகிய கூட்டணியுடன் சுந்தர் சி அரண்மனை 2 என்ற பெயரில் எடுத்தார். அதே கதையாக இருந்தாலும் இந்த படம் ஓரளவு ரசிகர்களிடம் சென்றடைந்தது. இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஆர்யா, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால், விவேக் ஆகியோரை வைத்து மீண்டும் அரண்மனை 3 என்ற பாகத்தை எடுத்தார். அதே பேய் பழிவாங்கும் கதையை சிறிதளவு மாற்றி அப்படியே படமாக எடுத்தார். இந்த படம் பெரியளவில் ரசிகர்களை சென்றடையவில்லை.
அரண்மனை 4
நகைச்சுவையை மையமாக கொண்டு இவர் இயக்கிய கலகலப்பு, கலகலப்பு 2 படங்களை ரசித்தவர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது. இந்த நிலையில், சுந்தர் சி மீண்டும் அதே பேய் பழிவாங்கும் கதையை மையமாக கொண்டு விஜய் சேதுபதி நடிப்பில் அரண்மனை 4 என்ற படத்தை உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே 3 பாங்களை பார்த்து நொந்து போகியுள்ள ரசிகர்கள் நான்காவது பாகமாக அதே பெயரில் அரண்மனை 4 என்ற படம் வெளியாகப் போவதை எண்ணி அலறுகின்றனர்.
இந்த படத்திலாவது வேறு கதை இருக்குமா? என்று ஏக்கத்துடன் ரசிகர்களை கேட்கின்றனர். மாபெரும் வெற்றி படங்களை அளித்த சுந்தர் சி இந்த படத்தில் என்ன கதையை மையமாக வைக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.