பொங்கல் விருந்தாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிய வாரிசு படம் நேற்று வெளியானது. குடும்பக் கதையாக அமைந்துள்ள வாரிசு திரைப்படத்தை குடும்பங்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தில் ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, பிரபு, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியாகி உள்ள வாரிசு படத்திற்கு திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
பக்கா குடும்ப படமாக உருவாகியுள்ள வாரிசு படமானது ஒரு கலவையாக காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் படமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில், வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலை குவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.17 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் வாரிசு திரைப்படம் முதல் நாளில் ரூ.5 கோடியும், கேரளாவில் இப்படம் ரூ.3.5 கோடியும் வசூலை குவித்துள்ளது. வெளிநாடுகளான அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வாரிசு படம் வசூலை குவித்து வருகிறது.
வாரிசு படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். அடுத்தடுத்த நாட்களில் வாரிசு படத்திற்கு குடும்பங்கள் திரளாக வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
வாரிசு திரைப்படமானது இரு குடும்பங்களுக்குள் நடக்கும் தொழில் மோதலை மையமாக கொண்டு உருவாகிய திரைப்படமாக அமைந்துள்ளது. இதில் நடிகர் விஜய்க்கு அண்ணன்களாக பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ஷாம் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். அவரது மகனாக கணேஷ் வெங்கட்ராமன் நடித்துள்ளனர். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வாரிசு படத்தில் நடித்திருப்பது இந்த படத்திற்கு பலமாக அமைந்துள்ளது,
சுமார் 9 ஆண்டுகளுக்கு பிறகு வாரிசு – துணிவு படங்கள் மோதிக்கொண்டதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.