Monday, March 27, 2023
Homeசினிமாதுணிவை தொட முடியாத வாரிசு.. வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்.. என்ன காரணம்?

துணிவை தொட முடியாத வாரிசு.. வருத்தத்தில் தளபதி ரசிகர்கள்.. என்ன காரணம்?

2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் திரையுலகிற்கு மிகவும் அருமையானது என்றே சொல்ல வேண்டும். நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விஜய், அஜித் இருவரது படங்களும் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

அஜித் நடித்த துணிவு படமும், விஜய் நடித்த வாரிசு படமும் பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது முதல் ஏற்பட்ட பரபரப்பு தகவல் உறுதியான பிறகு இருவரது ரசிகர்களும் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். இந்த நிலையில், கடந்த 31-ந் தேதி துணிவு படத்தின் ட்ரெயிலர் ரிலீசான நிலையில் வாரிசு படத்தின் ட்ரெயிலர் நேற்று ரிலீசானது.

துணிவு படத்தின் ட்ரெயிலர் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில், வாரிசு படத்தின் ட்ரெயிலர் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்தது. குடும்ப கதையாக உருவாகியுள்ள வாரிசு படத்தின் ட்ரெயிலரிலே சென்டிமெண்ட் காட்சிகள் தூக்கலாகவே இருந்தது. இது பொதுவான ரசிகர்களுக்கும் பூவே உனக்காக கால விஜய்யை ரசித்த ரசிகர்களுக்கும் இனிப்பாக அமைந்தாலும், அதிரடி விஜய்யை எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

இருப்பினும் இந்த சென்டிமெண்ட் படத்தில் ஒர்க் அவுட்டாகினால் நிச்சயம் வாரிசு வெற்றிப்படமாக அமையும். வழக்கமாக விஜய் படங்களின் ட்ரெயிலர் அவரது முந்தைய படங்களின் சாதனைகளை முறியடிக்கும் விதமாகவே அமையும். ஆனால், வாரிசு படத்தின் ட்ரெயிலருக்கு சுமாரான வரவேற்பே கிடைத்ததால் வழக்கமாக விஜய் பட ட்ரெயிலர்களுக்கு கிடைக்கும் வரவேற்பு கிடைக்கவில்லை.

ட்ரெயிலர் ரிலீசாகி 25 மணி நேரம் ஆகியும் 24 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால், துணிவு படத்தின் ட்ரெயிலர் 24 மணிநேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை பெற்றது. துணிவு படத்தின் ட்ரெயிலர் 24 மணிநேரத்தில் தொட்ட எண்ணிக்கையை வாரிசு ட்ரெயிலர் மிஞ்சும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. திரையரங்கில் எந்த படம் எந்த படத்தை மிஞ்சும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.