Saturday, March 25, 2023
Homeசினிமாஉடைந்த வியாழக்கிழமை சென்டிமெண்ட்... 11-ந் தேதி ரிலீசாகும் துணிவு! ஆர்ப்பரிக்கும் அஜித் ரசிகர்கள்

உடைந்த வியாழக்கிழமை சென்டிமெண்ட்… 11-ந் தேதி ரிலீசாகும் துணிவு! ஆர்ப்பரிக்கும் அஜித் ரசிகர்கள்

அஜித்குமார் நடித்து எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் துணிவு. நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களுக்கு பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. வங்கிக்கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெயிலர் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியானாலும் படம் வெளியாகும் தேதி அறவிக்கப்படாமலே இருந்தது. இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் துணிவு படம் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். துணிவு படம் வரும் 11-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது ட்விட்டர் பக்கத்தில் போனி கபூர் இதை அறிவித்துள்ளார். வாரிசு படம் 12-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், துணிவு படத்தை அதற்கு ஒருநாள் முன்னதாக 11-ந் தேதியே ரிலீஸ் செய்ய உள்ளனர். துணிவு படத்தில் அஜித்தின் சென்டிமெண்ட் பலவும் முறியடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில காலமாகவே வி மற்றும் வ வரிசையில் அஜித் படங்களின் தலைப்புகள் இடம்பெற்று வந்த நிலையில், இந்த முறை துணிவு என்று அசத்தலான தலைப்புடன் படக்குழு களமிறங்கியுள்ளது.

மேலும், அஜித்திற்கு வியாழக்கிழமை சென்டிமெண்ட் என்பதால் அவரது பெரும்பாலான படங்கள் வியாழக்கிழமை வெளியாகி வந்தது. துணிவு படம் அந்த சென்டிமெண்டையும் முறியடித்து புதன்கிழமை வெளியாக உள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ள துணிவு படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, வீரா, பிரேம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். நீரவ்ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

துணிவு படத்தில் அஜித்தின் கெட்டப் ரசிகர்களுக்கு விருந்தளித்த நிலையில், பாடல்கள் வெளியாகி மெல்ல மெல்ல ரசிகர்கள் வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் வழக்கமான அஜித்தாக இல்லாமல் மாறுபட்ட அஜித்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களின் நம்பிக்கையை வினோத் காப்பாற்றியுள்ளாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.