சென்னை: கொரோனா தொற்று அறிகுறிகளுடன் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 5 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்தது. எனினும், ஆகஸ்ட் 13 ஆம் தேதி இரவு அவரது உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக உடனடியாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். பின் உயிர்காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சில நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இத்துடன் அவரது மகன் எஸ்.பி.பி. சரணும் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். முன்னதாக எஸ்.பி. பாலசுப்பிரமணியத்திற்கு செயற்கை சுவாச உதவியை நீக்கும் அளவுக்கு நுரையீரல் செயல்பாடு முன்னேறும் என்று எதிர்பார்த்ததாக எஸ்.பி.பி. சரண் தெரிவித்து இருந்தார். எனினும், அவர் அந்த நிலைக்கு இன்னும் செல்ல வில்லை.
இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவலின் படி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது குறித்த ஆலோசனை நடந்தப்படுவதாக கூறப்படுகிறது.