பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான போதைப்பொருள் வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, அவருடைய சகோதரர் ஷோயிக் மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இவர்களுடைய ஜாமீன் மனுவை நேற்று மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போதைப்பொருள் தடுப்பு போலீசார் நடத்திய விசாரணையின் போது, ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் கொள்முதல் செய்தவர்கள் என சில பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை தெரிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதையடுத்து ரியா கூறிய பெயர்களின் அடிப்படையில், பிரபல நடிகைகளான சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், பேஷன் டிசைனர் சிம்மோன் கம்பட்டா ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
மேலும் ரியா அளித்துள்ள 20 பக்க வாக்குமூலத்தில் பிரபல நடிகைகள், நடிகர்கள், இயக்குநர்கள், நடிப்பு இயக்குநர்கள், தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பலர் என சுமார் 25 முதல் தர பாலிவுட் பிரபலங்களின் பெயர் இடம் பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.