இன்றைய காலத்தில் இந்திய சினிமாவை உலகெங்கிலும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு பல படங்கள் ரிலீசானாலும், அதன்மூலம் அந்த படங்களின் ஹீரோக்கள் உச்சத்திற்கு சென்றாலும் இன்றும் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் யார் என்று கேட்டால் இரண்டு பெயர்கள் மட்டுமே கேட்கும். ஒன்று அமிதாப்பச்சன், மற்றொன்று ரஜினிகாந்த்.
இவர்கள் இருவரில் யார் சூப்பர்ஸ்டார் என்று கேட்டால் அதில் அதிகம் கேட்கும் பெயர் ரஜினிகாந்த் மட்டுமே. ஏனென்றால், அமிதாப்பச்சனே இன்று குணச்சித்திர கதாபாத்திரங்களுக்கு மாறிவிட்டபோதிலும், ரஜினிகாந்த் இன்றும் மாஸ் ஹீரோவாகவே வலம் வருகிறார். அவரது படங்களுக்கு இன்றும் எதிர்பார்ப்பு துளியளவும் குறையவில்லை.
ஆனாலும், ரஜினிகாந்த் பாட்ஷா, படையப்பா, சந்திரமுகி போன்ற பிரம்மாண்ட வெற்றிஅளித்து வருடக்கணக்கில் ஆகிவிட்டது என்பதே உண்மை. லிங்கா தோல்விக்கு பிறகு கபாலி, காலா என்று தனது ரூட்டை மாற்றிய ரஜினிக்கு பேட்ட நல்ல வெறறிப்படமாக அமைந்தது. ஆனால், அடுத்து வந்த தர்பார், அண்ணாத்த படங்கள் மாபெரும் வெற்றியை பெறவில்லை.
இந்திய சினிமாவில் எத்தனையோ டான் படங்கள் இன்று வந்தாலும், ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படமும், பாட்ஷா பாயும்தான் ரசிகர்களுக்கு என்றுமே டான் ஆப் தி டான் என்றே சொல்லலாம். அஜித்திற்கு டான் பட்டத்தை பெற்றுத்தந்ததும் ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தின் ரீ மேக்கில் நடித்ததாலே சாத்தியமானது.
அப்படி மாஸ் படங்களில் நடித்த ரஜினிகாந்த் இன்று மிகவும் சாதாரணமான படங்களில் மட்டுமே நடித்து வருவது, அதாவது அவரது இமேஜிற்கு ஏற்றமாதிரியான படங்களில் நடிக்காதது ரசிகர்களுக்கு வருத்தமாக அமைந்துள்ளது. வயது முதிர்வு, அரசியல் வரமாட்டேன் என்று கூறியது உள்ளிட்ட காரணங்களால் இதுபோன்ற கதைகளை தேர்வு செய்து நடிப்பதாகவும், அவரது படங்களில் தற்போது அவரது மகள்களின் தலையீடு அதிகளவில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வெற்றிமாறன் உள்ளிட்ட தரமான ஆக்ஷன் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் ரஜினிகாந்துடன் கைகோர்க்க நல்ல கதைகளுடன் இருக்கும்போதும், அவர் அதுபோன்ற கதைகளில் நடிக்க தயக்கம் காட்டி வருவது அவரை இப்போதும் கொண்டாடும் ரசிகர்களுக்கு ஒரு வித வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும். பீஸ்ட் படத்தின் தோல்வியால் கட்டாயம் வெற்றி தர வேண்டிய நெருக்கடியில் உள்ள நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் படம் பிளாக்பஸ்டர் ஆகுமா? பிளாப் ஆகுமா? என்பதும் பெரிய கேள்வியையும் எழுப்பியுள்ளது.
அண்ணாமலை, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, சந்திரமுகி போன்ற பிரம்மாண்ட வெற்றியுடன் ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டாராக திரும்பி வருவது எப்போது? என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும் உள்ளனர்.
இந்த சூழலில்தான், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். ஜெய்பீம் படம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு ரசிகர்களாலும் மிகவும் பாராட்டப்பட்ட திரைப்படம் ஆகும். இதனால், ரஜினிகாந்தின் 170வது படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இந்த படம் மூலமாக ரஜினிகாந்த் தன்னுடைய கம்பேக்கை அளிப்பார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
ALSO READ | சமூக அவலத்தை மீண்டும் தோலுரிக்குமா தலைவர் 170..? கதையின் நாயகனாக கம்பேக் தருகிறார் சூப்பர்ஸ்டார்..!