தமிழ் சினிமாவில் ஆந்தாலஜி படங்கள் வருவது அரிது கிடையாது. ஏற்கனவே சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் நெட்ப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் தளத்திற்காகவே முன்னணி இயக்குனர்கள் இணைந்து ஒரு படத்தை உருவாக்கியிருப்பது இது முதல்முறை என கூறலாம். நெட்ப்ளிக்ஸ் போன்ற தளங்களுக்கு ஒரு படம் அல்லது சீரிஸ் உருவாக்க வேண்டும் என்றாலே அதில் கண்டிப்பாக ஆபாச வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாற்றிவிட்டனர் தமிழ் சினிமா இயக்குனர்கள். அந்த வகையில் பாவக்கதைகளும் விதிவிலக்கல்ல.
பிரபல முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், கவுதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா உள்ளிட்ட இயக்குனர்கள் இணைந்து சாதி, ஆணவ கொலைகளை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தளத்திற்காக படம் எடுக்க இந்த இயக்குனர்களை அணுகியதுமே அவர்களுடைய முதல் தேர்வாக காதல் தான் இருந்துள்ளது. ஆனால் அவர்களை மாற்றியது வெற்றிமாறன் தான். இதுகுறித்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். காதல் போன்ற சாதாரண விவகாரங்களை வைத்து தான் எடுக்க வேண்டும் என்றால் தான் விலகி கொள்வதாக வெற்றிமாறன் தெரிவித்ததாகவும், அவரை இழக்க தங்களுக்கு விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார். அதன் பிறகே ஆணவ கொலைகள் குறித்த பேச முன்வந்துள்ளனர்.
இனி படத்திற்குள் போகலாம், நால்வரின் படங்களுமே இந்த சமூகம் கட்டியெழுப்பிய கவுரவம் மீது எழுப்பப்படும் கேள்வியை எழுப்புகிறது. முதல் படம் சுதா கொங்கராவின் தங்கம். சாதிய கவுரவத்தை நேசிக்கும் தந்தையின் படித்த முற்போக்கான மகன் சாந்தனுவிற்கும், அடிப்படை இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த பெண் பவனி ஸ்ரீ இடையே மலரும் காதல் பற்றியது. ஆனால் அதை தாண்டி இந்த படத்தில் திருநங்கைகளின் பிரச்சனைகளை மையப்படுத்தி இருந்தார் இயக்குனர். எண்பதுகளில் நடக்க கூடிய இந்த கதையில் பவனி ஸ்ரீ அண்ணனாக சத்தார் வேடத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் கச்சிதமாக பொருந்தியிருந்தார். திருநங்கைகளை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது, அந்த காலகட்டங்களில் அவர்கள் மீதான பார்வை எப்படி இருந்தது உள்ளிட்டவைகளை சுதா கொங்கரா பேசியிருந்தார். சில வசனங்கள் உண்மையில் சமூகத்தின் மீது விடுக்கப்பட்ட பெரும் கேள்வியாகவே இருந்தது. இந்த கதை ஏற்படுத்திய தாக்கத்தை விட ரசிகர்களிடம் காளிதாஸ் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என்றே கூறலாம்.
அடுத்து விக்னேஷ் சிவனின் லவ் பன்னா உட்றணும். அஞ்சலி, கல்கி கோச்சலின் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் சாதி ஆணவ கொலைகள், ஓர்பாலின உறவுகள் என எல்லாத்தையும் பேச முயன்று இருக்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால் இப்படியான சென்சிடிவ் தலைப்புகளில் கை வைக்கும் முன் அவை குறித்த அடிப்படை புரிதல்கள் அவசியமாக பார்க்கப்படுகிறது. ஒரு இடத்தில் அஞ்சலி லெஸ்பியன் ஆனதற்கு ஒரு காரணம் கூறுகிறார். ஆண்களிடம் பழகாமல் பெண்களிடமே பழகியதால் தான் இப்படி மாறி விட்டதாக தெரிவிக்கிறார். அப்படி பார்த்தல் இந்திய சமூக சூழலில் பல பெண்கள் லெஸ்பியன்களாக தான் இருக்க வேண்டி வரும். மற்றும் அவர்கள் குறித்த தவறான புரிதலையும் இது ஏற்படுத்திவிடும். மற்றும் தேவையே இல்லாத இடத்தில் சில ஆபாச வார்த்தைகளை வைக்கிறார். அந்த வார்த்தைகள் அனைத்தும் பெண்களை மையப்படுத்தி இருக்க கூடிய ஆபாச வார்த்தைகள். ஒரு சமூக கட்டமைப்பை உடைக்க எடுக்கப்படும் ஒரு படங்களில் அதே சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் வேறு ஒன்றை பயன்படுத்துவது இந்த படத்திற்கான அடிப்படையவே மாற்றி விடும் என்பது இயக்குனருக்கு புரியவில்லை.
மூன்றாவது கவுதம் வாசுதேவ் மேனனின் வான்மகள். இதில் சிம்ரன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சிறு பெண் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து பேசியிருக்கும் படம். ஒரு அழகான குடுபத்திற்குள் இப்படியான கோர நிகழ்வு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது காட்டப்பட்டுள்ளது. ஆனால் முன்பு சொன்ன அதே புரிதல் குறைபாடு இதிலும் பல வசனங்களில் காணப்பட்டுள்ளது. பெண் உடல் கோவில் போன்றது வகையான வசனங்கள் எல்லாம் பல காலமாக உடைக்க வேண்டிய பர்னிச்சர் தான். அதை பயன்படுத்தியிருப்பதும், இவரும் பெண் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு இடத்தில் பெண்களை மையப்படுத்தி வரும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதும் எந்த விதத்தில் கதைக்கு நியாயம் சேர்க்கும் என்பது தெரியவில்லை.
கடைசியாக வெற்றிமாறனின் ஓர் இரவு. சாய் பல்லவி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். வழக்கம் போல ஒரு கவிதையில் கூற வேண்டிய விஷயத்தை படமாக மாற்றி அசத்தியிருக்கிறார். சாதி ஆணவ கொலையை மையப்படுத்தி எடுப்பதோடு நிற்காமல் அதன் தொடர்ச்சியையும் முடிவில் கூறியிருப்பது கதையை முழுமைப்படுத்தி இருந்தது. கீழ் ஜாதி பையனை காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போன சாய் பல்லவியை 2 வருடங்களுக்கு பிறகு மண்ணித்து விட்டதாக கூறி வளைகாப்பு நடத்த சொந்த ஊருக்கு பிரகாஷ் ராஜ் அழைத்து வருவதில் கதை நகர்கிறது. பிரகாஷ் ராஜ் பற்றிய நடிப்பு அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும் அவரையே கவனிக்க முடியாத அளவிற்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார் சாய் பல்லவி.
இந்த நான்கு படங்களிலும் தெரிந்தோ தெரியாமலோ இருக்க கூடிய ஒரு ஒற்றுமை, இந்த கவுரவம், சாதி ஆணவம் உள்ளிட்டவற்றால் தவறு செய்பவர்களை சூழ்நிலை கைதிகளாகவும் பிறருடைய நிர்பந்தத்தால் செய்வது போன்றும் காட்டியுள்ளனர். விக்னேஷ் சிவன் இன்னும் கொஞ்சம் அதிகமாக சென்று ஒரு ஆணவக்கொலை நிகழ்த்தியவரை ஒரே வசனத்தில் அப்பாவியாக மாற்றியிருக்கிறார். இருந்த போதிலும் இது மாதிரியான விஷயங்களை துணிந்து எடுக்க தொடங்கியிருப்பதே தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. சிறு சிறு புரிதல் குறைபாடுகளை தவிர்த்துவிட்டு பார்த்தல் பாவக்கதை நிச்சயம் தேவையான ஒன்று தான்.