மும்பையை சேர்ந்த பிரபல மாடல் மால்வி மல்ஹோத்ரா. இவர் ஒண்டிக்கு ஒண்டி எனும் தமிழ் படத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்கு மறுத்ததால், யோகேஷ் மஹிபால் சிங் என்ற நபர் மால்வியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்தார்.
கடும் தாக்குதலுக்கு ஆளான மால்வி மல்ஹோத்ரா மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தனக்கு நேர்ந்த தாக்குதல் பற்றி தனியார் செய்து நிறுவனத்திற்கு மால்வி பேட்டி அளித்துள்ளார். அதில் சம்பவ தினத்தில் நடந்தவற்றை விவரித்து இருக்கிறார்.
அந்தேரியில் உள்ள காபி கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பும் போது யோகேஷ் தன்னை தடுத்து நிறுத்தியுள்ளார். பின் கையில் இருந்த கத்தியால் மால்வியின் வயிற்றில் குத்தினார். பின் மால்வியின் முகத்தை தாக்க முற்பட்டார். இதை உணர்ந்த மால்வி கையால் முகத்தை மறைத்து கொண்டார்.
எனினும், கத்தி மால்வியின் கையில் ஆழமாக நுழைந்தது. தொடர் கத்திக்குத்து காரணமாக இரத்த வெள்ளத்தில் மயங்கிய மால்வி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
முன்னதாக மால்வி மற்றும் யோகேஷ் தொழில்நிமித்தமாக சிலமுறை சந்தித்து இருப்பதாகவும், நாளடைவில் யோகேஷ் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருக்கிறார். தனக்கு விருப்பம் இல்லை என மால்வி தெரிவித்தார். எனினும், தொடர்ந்து திருமணத்திற்கு யோகேஷ் கட்டாயப்படுத்தி வந்ததால் மால்வி யோகேஷை சந்திப்பதை தவிர்த்தார்.
சில காலம் அமைதி காத்த யோகேஷ் சமீப காலங்களில் மீண்டும் மால்வியை சந்திக்க முயற்சித்து வந்தார். தொடர்ந்து திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த யோகேஷ் சம்பவ தினத்தன்று மால்வியை கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார்.