Friday, May 26, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்தென்னிந்திய படங்களில் ஆர்வம் காட்டும் பாலிவுட் பிரபலங்கள் – என்ன காரணம்? ஓர் அலசல்

தென்னிந்திய படங்களில் ஆர்வம் காட்டும் பாலிவுட் பிரபலங்கள் – என்ன காரணம்? ஓர் அலசல்

பாகுபலி, கே.ஜி.எப்., ஆர்.ஆர்.ஆர். படங்களுக்கு பிறகு பான் இந்தியா என்ற கான்செப்ட்டில் திரையுலகங்கள் களமிறங்கியுள்ளன. இதற்கு முன்பே முன்னணி ஹீரோக்களின் படங்கள் அந்தந்த மொழிகள் மட்டுமின்றி அதிகளவில் வர்த்தகம் செய்யும் இந்தி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளுடன் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. ஆனால், அவர்களது சொந்த மொழிகள் தவிர பிற மொழிகளில் பெரியளவில் விளம்பரங்கள் இருக்காது.

பிரம்மாண்ட வெற்றி:

இந்த நிலையில், தற்போது மொழிகளை கடந்து ரசிகர்கள் படங்களை ரசிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால், வெளியிடப்படும் அனைத்து மொழிகளிலும் ரசிகர்கள் படங்களை கொண்டாடி வருகின்றனர். அதற்கு கே.ஜி.எப். ஆர்.ஆர்.ஆர், காந்தாரா படங்கள் மிகுந்த சான்று.

இந்த நிலையில், இந்தியா என்றால் வெளிநாட்டு மக்களுக்கு பாலிவுட் திரையுலகம் மட்டுமே ஞாபகத்திற்கு வந்து கொண்டிருந்த நிலையில், சமீபகாலமாக தென்னிந்திய படங்கள் அதை மாற்றியமைத்து வருகின்றனர்.அதற்கு ஆர்.ஆர்.ஆர். படம் ஆஸ்கருக்கு சென்றதே மிகச்சிறந்த உதாரணம்.

உலக அளவில் கவனம்:

தென்னிந்திய திரைப்படங்கள் தரமான கதையம்சங்களுடன் உலகளவில் வசூலை குவிப்பதால் தற்போது பாலிவுட் பிரபலங்கள் நேரடியாக தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலிவுட்டின் முன்னணி நாயகன்களாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் தென்னிந்திய சினிமா மூலம் மீண்டும் தங்களது கால்தடத்தை பதிக்க ஆசைப்படுகிறார்கள் என்றே கூறலாம்.

கே.ஜி.எப். படத்தில் ராக்கி பாய்க்கு நிகரான கதாபாத்திரமாக முதல் பாகத்தில் கருடன் கதாபாத்திரமும், இரண்டாவது பாகத்தில் அதிரா கதாபாத்திரமும் அமைந்திருக்கும். அதிராவாக பாலிவுட் பிரபலம் சஞ்சய் தத் நடிப்பில் மிரட்டியிருப்பார். கே.ஜி.எப். படத்திற்கு பிறகு தற்போது தளபதி 67 படத்திலும் சஞ்சய் தத் இணைந்துள்ளார்.
ஆர்வம்

தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற காட்பாதர் படத்திலும் சல்மான்கான் கவுரவ வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். அவரும் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். ஜாக்கி ஷெராப் பிகில் படத்தில் விஜய்யுடன் ஏற்கனவே நடித்துள்ளார். விவேகம் படத்தில் அஜித்துடன் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.

இனி வரும் காலங்களில் பாலிவுட் நாயகன்களை தென்னிந்திய சினிமாவில் கொடூர வில்லன்களாக தாராளமாக நாம் பார்க்கலாம் என்பதை மட்டும் நாம் உறுதியாக நம்பலாம். மேலும், இந்தியில் மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வெளியாகி வந்த திரைப்படங்கள் இனி தென்னிந்திய மொழிகளிலும் பெரியளவில் வெளியிடப்பட உள்ளன.