தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபம் நடிகர் விஜய். தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 12-ந் தேதி வாரிசு படம் வெளியானது. குடும்ப கதையான வாரிசு படத்திற்கு வரவேற்புகள் இருந்தாலும், பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது.
வாரிசு படத்துடன் வெளியான அஜித் நடித்த துணிவு படமும் வெளியானது. துணிவு படத்திற்கு நல்ல வரவேற்பும் வசூலும் கிடைத்து வரும் நிலையில், இணையதளத்தில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் மோதிக் கொண்டு வருகின்றனர்.
வாரிசு வசூல்
இந்த நிலையில், வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ், வாரிசு படம் 7 நாட்களில் உலக அளவில் 210 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், விநியோகஸ்தர் லலித்குமாரும் வாரிசு படம் 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் வாரிசு படத்தின் வசூல் குறித்து பேட்டி அளித்துளளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “விஜய்யின் வாரிசு திரைப்படம் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என வெளியாகும் தகவல் உண்மை இல்லை. லலித் குமார் வாங்கியது தமிழக ரிலீஸ் உரிமை மட்டும் தான். அதிலும் சில முக்கிய இடங்களை ரெட் ஜெயன்ட் நிறுவனம் வாங்கி விட்டது.
200 சதவீத பொய்
ஓவர் சீஸ் உரிமையை வேறு நிறுவனம் பெற்றுள்ள நிலையில் உலகளாவிய வசூல் லலித் குமாருக்கு எப்படி தெரியும்? படத்தின் வசூல் என்ன என்பது முழுமையாக தெரிய இன்னும் சில நாட்கள் ஆகும். வாரிசு படம் தனியாக ரிலீஸ் ஆகவில்லை, போட்டியாக வெளியான துணிவு திரைப்படமும் நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது. துணிவு படம் நல்ல வசூலை பார்த்து வரும் நிலையில் வாரிசு திரைப்படம் 210 கோடி வசூல் செய்துள்ளது என்பது 200% வாய்ப்பில்லாத ஒன்று.
நடிகர் விஜயின் அடுத்த படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் என்பதால் அவர் இப்படி ஒரு போஸ்டரை வெளியிட்டு இருக்கலாம். இது வியாபார யுக்தி.”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், ஜெயசுதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது