தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உலா வருபவர் வெற்றிமாறன்(Vetrimaaran). உயிரோட்டமான கதைக்களங்கள் மூலம் ரசிகர்களை திரையரங்கில் கட்டிப்போடுபவர். கள யதார்த்ததை முன்னிறுத்தியே படங்களை எடுப்பதில் கில்லாடி வெற்றிமாறன். பொல்லாதவன் படத்திற்கு பிறகு இவர் இயக்கிய ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய படங்களே அதற்கு மிகப்பெரிய சான்று ஆகும்.
நகைச்சுவை நடிகராக மட்டுமே நடித்து வந்த சூரியை கதையின் நாயகனாக்கி வெற்றிமாறன் இயக்கியுள்ள படம்தான் விடுதலை. கண்டிப்பாக மனதை ரணமாக்கும் கதைக்களம் என்பது படத்தில் டீசரை பார்க்கும்போது நம்மை உணரவைக்கிறது. விடுதலை(Viduthalai) படத்தில் நிர்வாண காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கவர்ச்சியாகவோ, காம எண்ணத்தை தூண்டும்விதமாகவோ இந்த நிர்வாண காட்சிகள் இல்லாமல் நம் கண்களில் நீரை வரவழைக்கும் விதத்தில் இந்த காட்சிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிகார உச்சத்தில் இருப்பவர்கள் ஆதரவற்றோர்கள் மீது திணிக்கும் ஒடுக்குமுறையின் உச்சமாக இந்த காட்சி இருப்பதால் இந்த காட்சி கட்டாயம் படத்தில் இருக்க வேண்டும் என்று வெற்றிமாறன் விரும்பியுள்ளார். ஆனால், தணிக்கை குழுவினர் இந்த காட்சியை வெட்டினால் மட்டுமே யு சான்றிதழ் தருவதாக கூறியுள்ளனர்.
ஆனால், வெற்றிமாறன் படத்தில் கட்டாயம் இந்த காட்சி இருக்க வேண்டும் என்றும், காவல்துறையின் கொடூரங்களை உணர்த்தும் விதமாக இந்த காட்சி இருக்க வேண்டும் என்பதற்காக இந்த காட்சி இருப்பதால் அதை வெட்ட மறுப்பு தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாகவே படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
விடுதலை படமானது காவல்துறைக்கும், ஒரு போராளிக்கும் இடையே நடக்கும் போராட்டமும், அந்த போராட்டத்தின்போது காவல்துறையால் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறையையும் பேசும்படமாக அமைந்துள்ளது. இந்த படத்தில் பெருமாள் வாத்தியாராக கணமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்த படம் வரும் 31-ந் தேதி வெளியாகிறது.