தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன்(Vetrimaaran). இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை(viduthalai) படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. மற்ற இயக்குனர்களை போல வெற்றிமாறனை ஒரு ஆக்ஷன் பட இயக்குனர் என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிட முடியாது. அவரது யதார்த்தமான கதைக்களத்தின் உள்ளே திரைக்கதைக்காக சண்டைக்காட்சிகள் படங்களில் இடம்பெற்றிருக்கும்.
விடுதலை:
அதற்கு அவரது ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகச்சிறந்த உதாரணங்கள். ஹீரோக்களை காட்டிலும் கதைக்கு முக்கியத்துவம் அளித்து கதையின் நாயகனுக்கு முக்கியத்துவம் அளித்து ஹீரோக்களை கதையின் நாயகனாக மாற்றி படத்தை வெற்றிபெறச் செய்வதில் கில்லாடி வெற்றிமாறன்.
அப்பேற்பட்ட இயக்குனரின் படத்தில் ஹீரோவாக, கதையின் நாயகனாக களமிறங்கியுள்ளார் சூரி(Soori). நீண்ட வருடங்களாக சிறு, சிறு வேடங்களில் தலை காட்டி வந்தாலும் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக தமிழ்நாடு முழுவதும் பரோட்டா காமெடி மூலம் மக்களைச் சென்றடைந்தவர். அதற்கு பிறகு உச்சத்திற்கே சென்றுவிட்டார் என்றே கூறலாம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு மட்டுமின்றி சூரிக்கும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை என்றே கூறலாம்.
நடிகன் சூரி:
வடிவேலுவும் ஒதுங்கியிருக்க, சந்தானமும் ஹீரோ அவதாரம் எடுக்க யோகிபாபுவும், சூரியும் முக்கிய நட்சத்திரங்களின் ஆஸ்தான காமெடியாக உருவெடுத்தனர். விஜய், அஜித், ரஜினி, விக்ரம், விஷால், சிம்பு, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என்று அத்தனை பட்டாளங்களுடனும் நகைச்சுவை நடிகராக கை கோர்த்துவிட்டார்.
நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டும் நாம் பார்த்து வந்த சூரியை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில், காவல்துறையில் கனவுகளோட வேலைக்கு சேர்ந்த ஒரு காவலராக யதார்த்தமாக வார்த்தெடுத்துள்ளார் வெற்றிமாறன். அந்த கதாபாத்திரத்திற்கு உயிர்சேர்க்கும் விதமாக தன்னுடைய உடலையும் வலுவாக்கியுள்ள சூரி, படத்திற்கு தனது நடிப்பால் வலுசேர்த்துள்ளார். அது படத்தின் ட்ரெயிலரிலே நமக்கு வெளிச்சமாகிறது.
அடுத்த கட்டம்:
நகைச்சுவை கதாபாத்திரமாக நாம் பார்த்து வந்த சூரிக்கு இந்த படம் நல்ல நடிகனாக ஒரு அவதாரத்தை பூசும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. படத்திற்கு படம் தேசிய விருதுகள் வாங்கும் இயக்குனர் யாரென்றால் அது வெற்றிமாறன் என்றே கூறலாம். அப்பேற்பட்ட இயக்குனரின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக நடிப்பிற்கான தேசிய விருது சூரிக்கு கிடைத்தால் அது ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.
இரண்டு பாகங்களாக உருவாக உள்ள விடுதலை படத்தின் முதல் பாகம்தான் தற்போது வெளியாக உள்ளது. இளையராஜா இசையில் விஜய் சேதுபதி மக்கள் புரட்சியாளனாக நடித்துள்ள இந்த படம் நிச்சயம் அடிமன ஆழம் வரை நம்மில் செல்லும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். சூரியின் கேரியரிலும் அவரை அடுத்தகட்ட பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லும் படமாக இது அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.