இந்திய திரையுலகில் பெரிய அளவில் வர்த்தகத்தை கொண்ட திரையுலகம் இந்தி திரையுலகம். ஆர்.ஆர்.ஆர்., பாகுபலி, கே.ஜி.எஃப், திரிஷ்யம். போன்ற தென்னிந்திய படங்களின் மாபெரும் வெற்றி பாலிவுட் திரைப்படங்களை தென்னிந்திய திரையுலகங்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இங்குபோல அங்கும் பான் இந்தியா படங்கள் சிலவற்றை எடுக்க முயற்சித்து அது தோல்வியிலும் முடிந்தது.
சமீபகாலமாக பாலிவுட் திரையுலகங்களுக்கு தமிழ் படங்கள் மீது மோகம் அதிகரித்துள்ளது. இங்கு நன்கு வெற்றி பெற்ற திரைப்படங்களை அவர்களது மொழியில் ரீமேக் செய்து வருகின்றனர். தமிழிலில் இருந்து பாலிவுட்டில் ஏற்கனவே ஏராளமான படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட்டில் இருந்து தமிழிலும் ஏராளமான படங்கள் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தற்போது தமிழில் மெகா ஹிட் ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்கிறேன் என்ற பெயரில் ஒரிஜினல் பதிப்பையே நாசம் செய்யும் அளவிற்கு படத்தை எடுத்து வைத்திருப்பது ரசிகர்களுக்கு வேதனையை ஏற்படுத்தி வருகிறது.
தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் கைதி. இந்த படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற படம். இந்த படத்தை பாலிவுட்டின் பிரபல நடிகர் அஜய் தேவ்கனே இயக்கி நடித்து போலா என்ற பெயரில் வெளியானது. படத்தின் டீசர் ரிலீசானது முதல் விமர்சனங்கள் எழுந்து வந்தது. படத்தின் ட்ரெயிலருக்கும் கைதிக்கும் சம்பந்தமே இல்லாதது போல இருந்தது. இந்த நிலையில், போலா படம் ரிலீசாகி பதான் அளவிற்கு வசூலை குவிக்கும் என்று எதிர்பார்த்த படக்குழுவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை என்றே போலாவின் நிலை இருந்தது.
இந்த நிலையில், தமிழில் அஜீத் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் வீரம். நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதாபாத்திரத்தில் வேஷ்டி, சட்டையில் அஜித் நடித்து குடும்பங்களுடன் ரசிகர்கள் சென்று கொண்டாடிய படம் வீரம். இந்த படத்தை இந்தியில் சல்மான்கான் நடிப்பில் கிஸி கா பாய் கிஸி கா ஜான் என்று ரீமேக் செய்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் வெளியானது முதலே விமர்சனங்கள் எழுந்து வருகிறது. வீரம் படத்தை எடுத்து வைக்கச் சொன்னால் எதையோ எடுத்து வைத்து என்னடா பண்ணி வச்சுருக்கீங்க என்று ரசிகர்கள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, வேட்டியில் சல்மான்கான் ஆடிய ஆட்டத்தை நெட்டிசன்கள் சரமாரியாக ட்ரோல் செய்து வருகின்றனர். வீரம் இந்தி ரீமேக் கைகொடுக்குமா..? அல்லது காலை வாருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, வெங்கடேஷ், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ALSO READ | இன்னும் கதையே ரெடி ஆகலயா..? பா.ரஞ்சித் சொன்ன பதிலால் ரசிகர்கள் அப்செட்..!