Monday, May 29, 2023
HomeசினிமாHeroesகம்பேக் நாயகன்… கோலிவுட்டில் தனி ராஜாங்கத்தை நடத்த தயாராகும் சிம்பு! ரசிகர்கள் உற்சாகம்

கம்பேக் நாயகன்… கோலிவுட்டில் தனி ராஜாங்கத்தை நடத்த தயாராகும் சிம்பு! ரசிகர்கள் உற்சாகம்

தமிழ் சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி பல துறைகளிலும் வித்தகராக இருக்கும் கலைஞர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் முதன்மையானவர் நடிகர், இயக்குனர் டி.ராஜேந்திரன். டி.ஆர். என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவரது மகன் சிலம்பரசன் என்ற சிம்பு.

தந்தையை போலவே சிம்புவும் நடிப்பு, நடனம், பாடல், இயக்கம் என்று வித்தக கலைஞர் ஆவார். சிறு வயதிலே திரையுலகில் காலடி எடுத்து வைத்து லிட்டில் சூப்பர்ஸ்டார் என்று பட்டம் வாங்கிய சிம்பு கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு வெற்றிப்படங்களுடன் சேர்த்து சர்ச்சைகளையும் கொடுத்து வந்தார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு மாபெரும் வெற்றியை சிம்பு தராவிட்டாலும் அவரது நடிப்பில் தேர்ச்சியும், அனுபவமும் தெரிந்தது. சராசரியான வெற்றிப்படங்கள் அளித்தாலும் உடல் எடையில் கட்டுப்பாடு இல்லாததால் அச்சம் என்பது மடமையடா படத்தில் சற்று எடை கூடிய சிம்பு, ஏஏஏ படத்தில் மிகவும் எடை கூடியும், செக்கச்செவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன் படங்களில் வித்தியாசமான சிம்புவாகவே காட்சி தந்தார். எடை கூடிய சிம்புவை பார்த்த ரசிகர்களுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது என்பதே உண்மை.

இனிமேல் சிம்பு அவ்வளவுதான் என்று அனைவருமே கூறிய நிலையில், கடுமையான கட்டுப்பாடுகள், உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் நம்ப முடியாத அளவிற்கு உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் பழைய சிம்புவாக நாம் பார்த்து ரசித்த சிம்புவாக கம்பேக் அளித்தார். அந்த படம் பெரிய வெற்றியை தராவிட்டாலும், பல இன்னல்களை சந்தித்த மாநாடு தமிழ் சினிமாவில் சிம்பு நடத்திய மாநாடாகவே அமைந்தது.

அங்கு தனது ஆட்டத்தை தொடங்கிய சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தில் தான் மிகப்பெரிய நடிகன் என்பதை நடிப்பால் மிரட்டியிருப்பார். சாமானியன் ஒரு தாதாவாக உருவெடுப்பதை அவ்வளவு அழகாக நடிப்பால் மிரட்டியிருப்பார். அவரது நடிப்பில் தற்போது வெளியாக உள்ள பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா சிம்பு ரசிகர்களுக்கு உண்மையில் நல்ல விருந்தாகவே இருந்தது என கூறலாம்.

ஒரு ஹாலிவுட் கலைஞரை போல வித்தியாசமான தோற்றத்தில் 40 வயது என்றால் நம்பவே முடியாத அளவிற்கு 25 வயது இளைஞனைப் போல தோற்றத்தில் மேடையில் தோன்றிய சிம்புவை பார்த்த ரசிகர்கள் மிரண்டுதான் போனார்கள். மேடையில் மட்டும் தோன்றியது மட்டுமில்லாமல் ஆட்டம் ஆடி, பாட்டு பாடி தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதுடன் இனிமேல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சிம்பு கூறியது கோலிவுட்டில் சிம்பு கோலோச்சிப் போகிறார் என்றே சிந்திக்க வைத்தது.
அசாத்தியமான கம்பேக் மூலம் தனது தோற்றத்தை முற்றிலும் மாற்றி கோலிவுட்டிற்கு திரும்பியுள்ள சிம்பு, இனிமேல் கோலிவுட்டில் தனக்கென தனி ராஜாங்கத்தை நடத்துவார் என்று மட்டும் உறுதியாக நம்பலாம்.

ALSO READ | பழைய லவ் பெயிலியரா? இளம் பெண்ணை மணக்கும் அசோக் செல்வன்.. யார் தெரியுமா?