தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஓங்கி குரல் கொடுக்கும் இயக்குனராக பார்க்கப்படும் பா.ரஞ்சித்தின் மெட்ராஸ், சார்பட்டா ஆகிய படங்கள் அவரது சிறந்த படைப்புகளுக்கு சான்று.
நட்சத்திரங்கள் நகர்கிறது படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசனுடன் ஒரு படம், சார்பட்டா 2 என்று பரப்பாக இயங்க உள்ளார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து நடத்தி வரும் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் சார்பட்டா 2 மற்றும் கமல் படம் குறித்து கேட்டதற்கு, இன்னும் 2 படங்களுக்குமே கதை தயார் ஆகவில்லை என்று பா.ரஞ்சித் கூறினார். இது பா.ரஞ்சித் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஏனென்றால், கமல்ஹாசனை வைத்து மதுரை பின்னணியில் ஒரு கதை உருவாக்க உள்ளதாக கூறியிருந்த பா.ரஞ்சித் இன்னும் கதையே தயார் ஆகவில்லை என்று கூறியிருப்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், பா.ரஞ்சித் முழு மூச்சாக தங்கலான் படத்தின் படப்பிடிப்பு பணிகளிலே ஈடுபட்டு வருகிறார். தற்போது வரை 80 சதவீதம் படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், 20 சதவீத படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது.
அந்த படப்பிடிப்பையும் முடித்த பிறகு படத்தின் வெளியீட்டு பணிகளில் தீவிரமாக பா.ரஞ்சித் ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த பணிகள் முடிந்த பிறகே பா.ரஞ்சித் தன்னுடைய அடுத்த பட பணிகளை தொடங்குவார் என்று கூறப்படுகிறது. விக்ரம் பட வெற்றிக்கு பிறகு கமல்ஹாசனும் மீண்டும் படங்களில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். மணிரத்னம் படம் உள்பட சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள கமல்ஹாசன் அந்த படங்களை முடித்த பிறகே பா.ரஞ்சித்துடன் கூட்டணி சேர்வார் என்றும் கூறப்படுகிறது.
ALSO READ | ஜெயிச்சுட்ட மாறா..! விடுதலை எனும் முழக்கத்தால் வெற்றி பெற்ற வெற்றிமாறன்..!