Friday, May 26, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது இரண்டாம் பாதியே – ஏன்? விரிவான அலசல்

ஒரு படத்தின் வெற்றியை தீர்மானிப்பது இரண்டாம் பாதியே – ஏன்? விரிவான அலசல்

இந்தியாவை பொறுத்தவரை குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரை சினிமாவும், வாழ்க்கையும் ஒன்றுடன் ஒன்று கலந்தது ஆகும். திரைப்படங்கள் பலவும் பலருக்கும் தங்களது வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு நிழலாகவும், பல திரைப்படங்கள் பலரின் வாழ்க்கையை சரியான பாதைக்கு கொண்டு செல்வதற்கு ஒரு வழிகாட்டியாகவும் அமைந்துள்ளது என்றும் கூறலாம்.

திரைப்படம்:

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று மசாலா தன்மையை தவிர்த்து எத்தனை, எத்தனையோ யதார்த்த படங்கள் நம் தமிழ் சினிமா கண்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் திரைத் தொழிலை நம்பி லட்சக்கணக்கான குடும்பங்களும் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்பேற்பட்ட திரையுலகம் இன்று தியேட்டரை மட்டும் நம்பியில்லாமல் ஓடிடி என்று அடுத்தகட்டத்திற்கு சென்றாலும் திரைப்படம் என்பது அதன் கதையை மட்டுமே நம்பியுள்ளது.

Movie Second Half Decides the Victory of Film Here is Why Detailed Analysis

பிரம்மாண்ட பொருட்செலவு, பிரபல நட்சத்திரங்களின் பட்டாளங்கள், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு விளம்பரங்கள் என்று என்ன கண்கவர் வித்தைகளை காட்டி ரசிகர்களை இழுத்தாலும், ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள வலுவான திரைக்கதை என்பது மிகவும் அவசியம் ஆகும்.

முதல் பாதி, 2ம் பாதி:

அதுவும் ஒரு திரைப்படத்திற்கு வலுவான திரைக்கதை என்பது முதல் பாதியை விட இடைவேளைக்கு பிறகு வரும் இரண்டாம் பாதிக்கே அதிகளவு தேவை ஆகும். ஏனென்றால், எந்தவொரு படத்தையும் தீர்மானிப்பது அதன் இரண்டாம் பாதி மட்டுமே ஆகும்.

ஏனென்றால், இயல்பாகவே ரசிகர்களின் மனங்களில் தொடக்கத்தில் எதை காட்டினாலும் இறுதியில் என்ன முடிவை காட்டுகிறோமோ அதைத்தான் ஏற்பார்கள். அதுதான் அவர்களது மனதில் நிற்கும். அந்த இறுதி முடிவு அதாவது கிளைமாக்ஸ் காட்சி அவர்களது மனதில் ஆழமாய் சென்று அதை அவர்கள் ஏற்றுவிட்டால் முதல் பாதி என்ன சொதப்பியிருந்தாலும் படம் வெற்றி பெற்றுவிடும். அதைவிடுத்து, முதல் பாதியில் பிரமாதப்படுத்தி இரண்டாம் பாதி சொதப்பியிருந்தால் நிச்சயம் அந்த படம் தோல்வி படமாக அமைந்துவிடும். அதற்கு ஏராளமான படங்களை நாம் உதாரணமாக கூறலாம்.

Movie Second Half Decides the Victory of Film Here is Why Detailed Analysis

வெற்றிக்கு காரணம் என்ன?

பிரம்மாண்ட படங்களாக இந்தியாவே போற்றிக் கொண்டாடிய திரைப்படங்களையே நாம் அதற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். பாகுபலி, கே.ஜி.எஃப். இரண்டு படங்களையும் எடுத்துக்கொண்டால் நமக்கு மிக எளிதாக புரிந்துவிடும். பாகுபலி முதல் பாகம் வந்தபோது தெலுங்கு திரையுலகில் மட்டுமே எதிர்பார்ப்பு இருந்தது. மற்ற மொழிகளில் மிகுந்த எதிர்பார்ப்பு ஒன்றும் இல்லை. பாகுபலி முதல் பாகத்தில் முதல் பாதியில் பிரபாஸ் – தமன்னாவின் காதல் பாடல்களின் போது சீட்டை விட்டு எழுந்து சென்று புகைப்பிடிக்க ரசிகர்கள் கூட்டமும் இருந்தனர்.

ஆனால், அந்த படத்தை ரசிகர்களின் அடிமனம் வரை கொண்டு சென்றது அதன் செகண்ட் ஆப் எனப்படும் இரண்டாம் பாகம். மகேந்திர பாகுபலியின் காட்சிகள் ரசிகர்களை சீட்டின் நுனியிலே உட்கார வைத்தது. போர்க்காட்சிகள் நம் கண்களை அசையவிடாமல் செய்தது. இவையனைத்திற்கும் மேலாக இறுதிக்காட்சியில் பாகுபலியை கட்டப்பா தான் கொலை செய்தார் என்று காட்டியபோது ரசிகர்கள் பலரது கேள்வியும் கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்? என்பதே ஆகும். இதற்கான பதிலை 2வது பாகத்தில் வந்து தெரிந்து கொள்ளுங்கள் என்று ராஜமௌலி இந்தியா முழுவதும் பாகுபலியை வெற்றி பெற வைத்தார். அதன் எதிரொலி பாகுபலி 2 இந்தியா முழுவதும் அபார வெற்றி.

பாகுபலி, கே.ஜி.எஃப்

பாகுபலி படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு கூட இல்லாமல் வெளியான திரைப்படம்தான் கே.ஜி.எஃப். ஒட்டுமொத்த இந்திய ஸ்டார்களை எல்லாம் யஷ் தூக்கி சாப்பிட்ட படம் கே.ஜி.எஃப். ஒரு கேங்ஸ்டராக படத்தின் தொடக்கம் முதலே பட்டையை கிளப்பிய ராக்கிபாய், செகண்ட் ஆப்பில் எந்த ஒரு இடத்திலும் வேகம் குறையாமல் சென்று கருடனை வெட்டி வீசுவது போல திரைக்கதை பிரமாதமாக அமைந்த காரணத்தினால்தான் கே.ஜி.எப் 1 மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

Movie Second Half Decides the Victory of Film Here is Why Detailed Analysis

பாகுபலி 1 படத்தில் முதல் பாதியை காட்டிலும், இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகம் சூடுபிடித்திருக்கும். கே.ஜி.எஃப். படத்தில் படம் முழுவதுமே திரைக்கதை சூடுபிடித்திருக்கும். அதன் தாக்கமே கே.ஜி.எஃப். 2 உலகமே திரும்பி பார்க்கும் அளவிற்கு வெற்றி பெற்றது.

ரோலக்ஸ்:

இந்த படங்களை போலவே தமிழில் வந்த விக்ரம் படத்தையும் நாம் உதாரணமாக கூறலாம். மேலே கூறிய பாகுபலிக்கும், கே.ஜி.எஃப். படத்திற்கும் படத்தின் இரண்டாம் பாதி முழுவதும் பக்கபலமாக அமைந்தது. ஆனால், விக்ரம் படத்திற்கு கிளைமேக்ஸிற்கு பிறகு வந்த காட்சிதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Movie Second Half Decides the Victory of Film Here is Why Detailed Analysis

மேலும், லோகேஷ் யுனிவர்ஸ் என்ற ஒன்று உருவானதற்கும் அந்த காட்சிதான் காரணம். சூர்யா எத்தனையோ கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், அவரது நடிப்புத் தீனிக்கு எத்தனையோ கதாபாத்திரங்கள் அடையாளம் பெற்றுத் தந்திருந்தாலும் விக்ரம் படத்தில் வந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் படம் பார்த்துச் சென்ற அனைவரது மனங்களிலும் ரோலக்ஸ் பற்றிய சிந்தனையை ஓடவைத்துக் கொண்டிருந்தது.

டான், விஸ்வாசம்

ரோலக்ஸ் கதாபாத்திரம் இல்லாமல் விக்ரம் படம் வெளியாகியிருந்தால், நிச்சயம் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்காது. 100 சதவீத வெற்றியை 200 சதவீத வெற்றியாக மாற்றியது ரோலக்ஸ் கதாபாத்திரம். அதற்கான திரைக்கதை. ஆக்ஷன் படங்களுக்கு மட்டுமின்றி குடும்ப படங்களுக்கும் இது பொருந்தும். சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் மிகவும் ஜாலியான படமாக இருக்கும். ஆனால், இரண்டாம் பாதியின் கடைசியில் தந்தை சென்டிமெண்ட் படம் பார்த்த அனைவரையும் கண்கலங்க வைத்திருக்கும். அதுவே படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

Movie Second Half Decides the Victory of Film Here is Why Detailed Analysis

விவேகம் தோல்விக்கு பிறகு சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் வெற்றி பெற்றதற்கும் இதுவே காரணம். தந்தை – மகள் சென்டிமெண்ட் படமான இந்த படத்தின் இரண்டாம் பாதியில் அஜித்- அனிகா காட்சிகள் கண்கலங்க வைக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, வழக்கமான அஜித்தாக எதிரியை பந்தாடாமல் வில்லனிடம் அடிவாங்கி தனது மகளின் வெற்றிக்காக போராடி, கடைசியில் மகள் தன்னை அப்பா என்று அழைக்கும்போது அஜித் ஆனந்த கண்ணீர் வடிக்கும் காட்சியில் ஒட்டுமொத்த திரையரங்கமே கண்ணீர் வடித்தது. இதுதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு காரணம்.

இதுபோன்று இரண்டாம் பாதி திரைக்கதையை வலுவாக்கி வெற்றி பெற்ற திரைப்படங்களின் பட்டியல் ஏராளம். இதன் காரணமாவே படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் அமைக்கப்படுகிறது.