நடிகர் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் துணிவு. விஜய் நடித்த வாரிசு படத்துடன் வெளியான துணிவு படத்திற்கு நல்ல அமோக வரவேற்பும், ஆதரவும் கிடைத்ததையடுத்து வசூலில் சக்கை போடு போட்டு பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில், ஏகே 62 படத்தை விக்னேஷ்சிவன் இயக்குவதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்த நிலையில் கதை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விக்னேஷ் சிவனுடனான அஜித்தின் கூட்டணி முறிந்தது.
மகிழ் திருமேனி:
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மகிழ் திருமேனி அஜித்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியானது. கிட்டத்தட்ட அஜித்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளது உறுதியாகிவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் பல நல்ல இயக்குனர்கள் கவனிக்கப்படாமலே உள்ளனர். அந்த வகையில் மகிழ் திருமேனியும் ஒருவர். அவர் நிச்சயம் அஜித் படத்திற்கு பிறகு மிகப்பெரிய நட்சத்திரங்களுடன் ஏராளமான படங்கள் செய்வார் என்று நம்பலாம். ஏனென்றால் அவரது கடந்த கால படங்களை நாம் ஆராய்ந்து பார்த்தால் மகிழ் திருமேனி எப்பேற்பட்ட இயக்குனர் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.
கடந்து வந்த பாதை:
தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் இயக்குனர் என்று அனைவராலும் அறியப்பட்ட கௌதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மகிழ் திருமேனி. 2010ம் ஆண்டு முன்தினம் பார்த்தேனே என்ற மென்மையான படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
அதற்கு அடுத்து அவர் இயக்கிய அத்தனை படங்களும் ஜனரஞ்சன ரகம்தான். 2012ம் ஆண்டு அருண்விஜய்யை வைத்து இவர் இயக்கிய தடையற தாக்க படம் மகிழ் திருமேனி ஒரு நல்ல ஆக்ஷன் இயக்குனர் என்பதை தமிழ் சினிமாவிற்கு அடையாளப்படுத்தியது. லோகேஷ் கனகராஜ் தன்னுடைய லோகி சீரிசில் பயன்படுத்தும் கோஸ்ட் என்ற வார்த்தை இன்று ரசிகர்களுக்கு எந்தளவு பரிச்சயம் என்பது நாம் அறிந்தது. அதை 2014ம் ஆண்டே ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் மகிழ் திருமேனி.
மீகாமன், தடம்
ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய மீகாமன் மிகவும் அருமையான ஆக்ஷன் படம். போதைப் பொருள் கும்பலுக்குள் ஊடுருவும் போலீஸ் அதிகாரியை பற்றிய படம் என்றாலும், அதை மிகவும் நேர்த்தியாகவும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக எந்தவொரு அடையாளமும் இல்லாத வில்லனைத் தேடிச் செல்லும் படமாகவும் மீகாமனை மகிழ் திருமேனி எடுத்திருப்பார். காதல், சென்டிமெண்ட் என்று நேரத்தை வீணடிக்காமல் முழுவதும் ஆக்ஷன் படமாக மிகவும் அருமையான படமாக மீகாமன் இருக்கும். நிச்சயம் அதை பார்க்காத ரசிகர்கள் வாய்ப்பு கிடைத்தால் மீகாமன் பாருங்கள்.
மீகாமன் பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் மகிழ் திருமேனியின் நல்ல படைப்பு என்பதை திரையுலகம் பாராட்டத் தவறவில்லை. இதற்கு அடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான படம்தான் தடம். என்னை அறிந்தாலுக்கு பிறகு அருண் விஜய்யின் மார்க்கெட் உயர்ந்திருந்த நேரத்தில் அவரது மார்க்கெட்டை மேலும் உயர்த்திய படம்தான் தடம். இரட்டை வேடத்தில் ஒரு குற்றப்பின்னணியில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ் சினிமாவில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத படம் என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு தடம் படத்தின் வெற்றியே உதாரணம் ஆகும்.
ரசிகர்கள் எதிர்பார்ப்பு
கடந்தாண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கலகத் தலைவன் படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பபை பெற்றது. இதுபோன்று தரமான படங்களையே எடுத்து வரும் மகிழ் திருமேனி நிச்சயம் ஏகே 62 படத்திலும் அஜித் ரசிகர்களையும், பொது ரசிகர்களையும் நிச்சயம் ஏமாற்ற மாட்டார் என்றே கூறலாம். விரைவில் அதாவது மார்ச் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ALSO READ | பேமிலி ஆடியன்ஸ் மனதில் மீண்டும் இடம்பிடிப்பாரா மாதவன்..? எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா மித்ரன்?