இந்தாண்டு தமிழ் திரையுலகத்திற்கு நிச்சயம் மிகப்பெரிய ஆண்டாக அமைந்துள்ளது என்றே கூறலாம். பொங்கலுக்கு வெளியான வாரிசு மற்றும் துணிவு படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், விஜய்யின் அடுத்த படமான லியோ ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் லியோ வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றே அனைவரும் எதிர்பார்த்த வேளையில் அவரது லியோ படம் வரும் ஆயுத பூஜையன்றே வெளியாகிறது. ஆயுதபூஜை. விஜயதசமி, சனி, ஞாயிறு விடுமுறையை கணக்கிட்டு இந்த முறை ஆயுத பூஜை சிறப்பாக இந்த படம் வெளியாகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் லியோ ஆயுத பூஜைக்கு வெளியாவதில் தீபாவளிக்கு வெளியாகப் போகும் படம் யாருடையது?என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் தீபாவளிக்கு வெளியாவது பெரும்பாலும் உறுதியாகிவிட்டது. படப்பிடிப்பும், அதன் அப்டேட்களும் தீவிரமாக வந்து கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்துடன் போட்டிபோடப் போகும் படங்கள்தான் யாருடையது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அஜித் – விக்னேஷ்சிவன் கூட்டணி இணைந்திருந்தால் தீபாவளிக்கு ஏகே 62 வெளியாகியிருந்திருக்கும். ஆனால், அந்த கூட்டணி தள்ளிப்போனதால் அஜித் படம் தீபாவளிக்கு வெளியாவதில் சந்தேகம் எழுந்துள்ளது. மறுமுனையில் சூர்யாவின் 42 உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களும் தயாராகி வருகின்றனர்.
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அவரது படமும் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு அதிகமுள்ளது. விக்ரம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் மீண்டும் தனது வழக்கமான ஆக்ஷன் பாணிக்கு களமிறங்கியுள்ளார். ஏனென்றால் கமல்ஹாசன் திரைத்துறையின் அனைத்திலும் தனது ஆளுமையை செலுத்திவிட்டார். மீண்டும் அவரை ஆக்ஷன் அவதாரமாகவே பார்க்க ரசிகர்கள் விரும்புகின்றனர்.
இதனால், இந்தியன் 2 ஆக்ஷன் படமாகவே தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டால் நிச்சயம் வரும் தீபாவளிக்கு இந்தியாவின் உச்சநட்த்திரங்கள் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் படங்கள் மோதிக்கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இது தமிழ் திரையுலகிற்கு மாபெரும் கொண்டாட்டமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.