இந்திய திரையுலகின் மூத்த இயக்குனர் விஸ்வநாத். தெலுங்கின் பல்வேறு காவியப் படைப்புகளை உருவாக்கியவர். 92 வயதான இவர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவிற்கு இந்திய திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும், இந்தியாவின் மிகப்பெரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.
திரைத்துறைக்குள் வந்தது எப்படி?
கடந்த 1930ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் ரீபேலியில் பிறந்தவர். ஆந்திரா கிறிஸ்தவ கல்லூரியில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றார். படிப்பை முடித்த பிறகு சென்னையில் உள்ள வாகினி ஸ்டூடியோசில் ஒலிப்பதிவாளராக வாழ்க்கையைத் தொடங்கினார்.
அங்குதான் கனவுப்பட்டறையில் இவர் வேறு உருவம் எடுத்தார். இவருக்கு திரைப்படங்கள் மீது இருந்த ஆர்வம் இவரை இயக்கத்தின் பக்கம் கொண்டு சென்றது. 1951ம் ஆண்டு தமிழ், தெலுங்கில் உருவான பாதாள பைரவி படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
நந்தி விருது
பின்னர், 1965ம் ஆண்டு ஆத்ம கௌரவம் என்ற படத்தை முதன்முறையாக இயக்கினார். நாகேஸ்வரராவ், காஞ்சனா நடித்த இந்த படம் ஆந்திர திரையுலத்தையே திரும்பி பார்க்கவைத்தது. யார் அந்த இயக்குனர்? என்று டோலிவுட்டே திரும்பி பார்க்க வைத்தது.
இந்த படத்திற்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்தது. அதாவது வெண்கலப்பதக்கம் அந்த பிரிவில் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அடுத்தடுத்து தெலுங்கில் என்.டி.ராமராவ், கிருஷ்ணா, சோபன்பாபு ஆகிய அன்றைய நட்சத்திரங்களை இயக்கினார்,
இந்தியிலும் கால்தடம்
1969ம் ஆண்டு இவர் இயக்கிய செல்லெலி கபூரம் திரைப்படம் ஆந்திர அரசின் நந்தி விருதின் தங்கப்பதக்கத்தை வென்றது. சோபன்பாபு, வாணிஸ்ரீ நடித்திருந்த இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 1972ம் ஆண்டு இவர் இயக்கிய காலம் மாரிண்டி படமும் நந்தி விருதின் தங்கப்பதக்கத்தை வென்றது. 1973ம் ஆண்டு சோபன்பாபுவை வைத்து இவர் இயக்கிய சாரதா படத்திற்கு மீண்டும் ஆந்திர அரசின் நந்தி விருதின் தங்கப்பதக்கம் கிடைத்தது.
வெற்றிகளையும், விருதுகளையும் குவித்த விஸ்வநாத்தை இந்திய திரையுலகமே திரும்பி பார்த்தது. தெலுங்கில் கோலோச்சியவர் இந்தியிலும் தன் கால்தடத்தை 1979ம் ஆண்டு படைத்தார். சர்கம் என்ற படம் மூலம் இந்தியில் இயக்குனராக அறிமுகமானார். இந்தியில் ராகேஷ் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, ஸ்ரீதேவி ஆகியோரை இயக்கி அங்கேயும் வெற்றி பெற்றார்.
1981ம் ஆண்டு இவர் இயக்கிய சப்தாபதி சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்றது. பிலிம்பேர் விருது, தேசிய விருது, நந்தி விருது என்று ஏராளமான விருதுகளை வென்ற படத்தை இயக்கிய கே.விஸ்வநாத் 2010ம் ஆண்டு கடைசியாக சுபப்ரதம் என்ற படத்தை இயக்கினார். அதன்பின்னர், ஒரு நடிகராக மட்டுமே திரையில் தோன்றினார்.
மானசீக குரு
இந்தியாவின் பிரபல நட்சத்திரங்களான அமிதாப், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, மோகன்லால், மம்முட்டி அனைவரும் இவரை ஒரு குருவாகவே கருதுகின்றனர். 1995ம் ஆண்டு முதல் சிறு, சிறு வேடங்களில் நடித்தவர் இயக்கத்தை நிறுத்திய பிறகு நடிகராக பல படங்களில் தோன்றினார்.
ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தவர் தமிழில் குருதிப்புனலில் நடிகராக அறிமுகமானார். முகவரியில் அன்பான தந்தையாக, யாரடி நீ மோகினியில் கண்டிப்பான தாத்தாவாக என பல படங்களில் நடித்துள்ளார். தமிழில், புதிய கீதை, பகவதி, ராஜபாட்டை, சிங்கம் 2, லிங்கா, சொல்லிவிடவா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
தாதாசாகேப் பால்கே
இயக்குனர், நடிகர் என இந்திய திரையுலகில் இவர் ஆற்றிய பங்கிற்கு இவருக்கு 2017ம் ஆண்டு இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 1992ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. பிரான்ஸ், மாஸ்கோ, ஐக்கிய அரபு அமீரகத்திலும் இவர் விருதுகளை வென்றுள்ளார்.
இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.