தமிழ் திரையுலகில் பொங்கலுக்கு அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படம் வெளியானது. இந்த படங்கள் வசூலில் சக்கை போடு போட்ட நிலையில், தற்போது பெரிய படமாக வாத்தி படம் வெளியாகிறது.
பிப்ரவரி 17-ந் தேதி ரிலீசாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படம் நாளை வெளியாகிறது. படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் ஏற்கனவே ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், படம் ரசிகர்கள மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷின் வாத்தி படத்துடன் செல்வராகவனின் பகாசூரன் படமும் நாளை ரிலீசாகிறது. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படங்களை அளித்த செல்வராகவன் சமீபகாலமாக நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த செல்வராகவன், சாணிக்காயிதம் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த நிலையில், மோகன் ஜி நடிப்பில் அவர் நடித்துள்ள பகாசூரன் படம் நாளை ரிலீசாகிறது. தனுஷ் தமிழ் சினிமாவில் இன்று உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார் என்றால், அதற்கு செல்வராகவன் முக்கிய காரணம் ஆவார். காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன என்று செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் வித்தியாசமான படங்களில் நடித்து தான் ஒரு நல்ல நடிகன் என்பதையும் நிரூபித்தார்.
இருவரும் அண்ணன் தம்பி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். அண்ணனால் வளர்த்தெடுக்கப்பட்ட தம்பியின் படமும், தம்பியை வைரமாக பட்டை தீட்டிய அண்ணனின் படமும் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் கோலிவுட்டில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போதுள்ள நிலவரப்படி பகாசூரன் படத்தை காட்டிலும் வாத்தி படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
வாத்தி படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பகாசூரன் படம் வட தமிழகத்தில் நல்ல வசூலை குவிக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர்.