Thursday, May 25, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்லியோ படக்குழுவை மனதார பாராட்ட வேண்டும்..! ஏன்..?

லியோ படக்குழுவை மனதார பாராட்ட வேண்டும்..! ஏன்..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருவது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். இந்த நிலையில், லியோ படத்திற்காக காஷ்மீரீல் நடைபெற்று வந்த படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

வழக்கமாக ஒரு படத்தின் வீடியோ என்றால் அது படத்தின் நாயகனையும், இயக்குனரையும் மற்ற பிரபல கலைஞர்களை மட்டுமே உள்ளடக்கியதாக இருக்கும். இந்திய திரையுலகம் கதாநாயக பிம்பத்திலும், ரசிகர்கள் கதாநாயகர்களுக்கு ஆரத்தி எடுப்பதுமே இதற்கு காரணம். இதனால், பல ஆண்டுகளாகவே ஒரு திரைப்படம் உருவாக உழைத்து வரும் ஆயிரக்ணக்கான தொழிலாளர்கள் பற்றி தெரியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.

லியோ படமும் கதாநாயகனை மையமாக கொண்ட ஆக்ஷன் படம்தான் என்றாலும், இன்று வெளியான வீடியோ உழைப்பவர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டிய வீடியோவாக அமைந்தது. சுமார் 3 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் விஜய் பற்றி 1 நிமிடம் மட்டுமே இருக்கும். ஆனால், இந்த படத்திற்காக காஷ்மீரின் கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டே மிகவும் சிரமப்பட்ட கலைஞர்களின் முகங்களையும், அவர்களின் உழைப்பையும் அழகாக அந்த வீடியோவில் காட்டியுள்ளனர்.

வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று கடந்துவிடாமல் லியோ படக்குழுவினருக்காக சமையல் செய்வதற்காக சென்னையில் இருந்து காஷ்மீருக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாத்திரம் கழுவும் பெண்ணின் சிரமங்களையும் படத்தின் மேக்கிங் என்று காட்டியிருப்பது உண்மையிலே பாராட்டத்தக்க விஷயம். ஏனென்றால், நீண்டகாலமாக திரைக்கு பின்னால் உழைக்கும் கலைஞர்கள் பற்றி எந்த படத்தின் உருவாக்க வீடியோவிலும் இருந்ததே இல்லை.

லியோ படத்தின் உருவாக்க வீடியோவில் மனைவியை பிரிந்து படப்பிடிப்பில் உள்ள கணவன், குழந்தை பிரிந்து பார்க்க முடியாத நிலையில் உள்ள தந்தை, தாயின் மரணத்தில் இறுதிச்சடங்கை முடித்துக்கொண்டு உடனே படப்பிடிப்பிற்கு திரும்பிய மகன் என்று பல தொழில்நுட்ப கலைஞர்களின் சிரமங்களையும், காட்சிகளை படம்பிடிக்க பட்ட சிரமங்களையும் கூறியிருப்பதற்காகவே லியோ படக்குழுவை பாராட்டலாம்.

லியோ படத்தின் இந்த செயலை மற்ற படக்குழுவினரும் ஒரு முன்னுதாரணமாக மேற்கொண்டு தங்களது படங்களின் மேக்கிங் வீடியோவில் அவர்களின் வலியையும், சிரமங்களையும், உழைப்பையும் வெளிக்காட்டி அங்கீகாரத்தை பெற்றுத்தர முன்வர வேண்டும்.

ALSO READ | கம்பேக் நாயகன்… கோலிவுட்டில் தனி ராஜாங்கத்தை நடத்த தயாராகும் சிம்பு! ரசிகர்கள் உற்சாகம்