90ஸ் கிட்ஸ்கள் பலராலும் தமிழ் சினிமாவில் நடிகர்களாக, நகைச்சுவை கதாபாத்திரங்களாக அறியப்பட்ட பலரும் ஒரு காலத்தில் பிரம்மாண்ட இயக்குனர்களாக வலம் வந்தவர்கள்.
பொம்பளைங்க காதலைத்தான் நம்பிவிடாத என்ற பாடலில் நடித்த நடிகர் சுந்தர்ராஜன் நகைச்சுவை பலரையும் வாய்விட்டு சிரிக்க வைத்திருக்கும். ரஜினிகாந்த், விஜய், விஜயகாந்த், சரத்குமார் என்று பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சுந்தர்ராஜன் ஒரு சிறந்த இயக்குனர். அவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் 125 நாட்களை கடந்து ஓடியவை. அவர் இயக்கிய மாபெரும் வெற்றிப்படங்களின் பட்டியலை காணலாம்.
- 1977ம் ஆண்டு அன்று சிந்திய ரத்தம் என்ற படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான சுந்தர்ராஜன் 5 ஆண்டுகளுக்கு பிறகு 1982ம் ஆண்டு இயக்கிய பயணங்கள் முடிவதில்லை படம் அவரை திரும்பி பார்க்க வைத்தது.
- 1984ம் ஆண்டு விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய படம். விஜயகாந்த் நடித்த மிகவும் வித்தியாசமான திரைப்படங்களில் எப்போதுமே முதன்மையானது ஆகும்.
- 1985ம் ஆண்டு அவர் மோகனை வைத்து இயக்கிய குங்குமச்சிமிழ் படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.
- 1986ம் ஆண்டு விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய அம்மன் கோயில் கிழக்காலே படம் ரசிகர்களுக்கு செம எண்டெயினராக அமைந்துது என்றே கூறலாம். அந்த படத்தில் வரும் சின்னமணிக்குயிலே பாடல் இன்றளவும் பிரபலம்.
- அதே ஆண்டு மோகனை வைத்து அவர் இயக்கிய மெல்ல திறந்தது கதவு 90ஸ் கிட்ஸ் அனைவரின் பேவரைட் படம் என்றே கூறலாம். அதுவும் வா வெண்ணிலா பாடல் காதலர்கள் அனைவருக்கும் பேவரைட் கீதம்.
- 1989ம் ஆண்டு முதன்முறையாக ரஜினிகாந்தை வைத்து ராஜாதிராஜா படத்தை இயக்கினார். இரட்டை வேடங்களில் ரஜினிகாந்த் அசத்திய இந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அவருக்கு அமைந்தது.
- 1992ம் ஆண்டு சத்யராஜை வைத்து அவர் இயக்கிய திருமதி பழனிசாமி ஆக்ஷன், காமெடி, சென்டிமெண்ட் கலந்த கலவையாக தமிழ்நாடு முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது.
- ஆடியிலே சேதி சொல்லி என்ற பாடல் இடம்பெற்ற என் ஆசை மச்சான் படத்தை 1994ம் ஆண்டு விஜயகாந்தை வைத்து இயக்கினார். அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.
- மோகன், விஜயகாந்த், ரஜினிகாந்த், சத்யராஜ் என்று பல பிரபலங்களை இயக்கிய சுந்தர்ராஜன் 1997ம் ஆண்டு அப்போது வளர்ந்து வந்து கொண்டிருந்த நடிகர் விஜய்யை வைத்து காலமெல்லாம் காத்திருப்பேன் படத்தை இயக்கினார். மென்மையான காதல் படமான இந்த படம் எப்போதுமே விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பேவரைட் படமாக உள்ளது என்றே கூறலாம்.
தமிழ் சினிமாவில் இன்றும் பிரபலமாக உள்ள மோகன்,விஜயகாந்த், சத்யராஜ், ரஜினிகாந்த் ஆகியோரை இயக்கிய சுந்தர்ராஜன் கடைசியாக 2013ம் ஆண்டு சித்திரையில் நிலாச்சோறு என்ற படத்தை இயக்கினார். அதன்பின்பு, அவ்வப்போது நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
ALSO READ | பிரசாந்த் செய்த தவறையே மோகன் செய்துவிட்டாரா..? பொன்னான வாய்ப்பை நழுவவிட்டு விட்டாரா?