Sunday, May 28, 2023
Homeசினிமாசினிமா செய்திகள்மனதை ரணமாக்கும் அயோத்தி படத்தை ஏன் பார்க்க வேண்டும்? ஒரு ரசிகனின் குரல்..!

மனதை ரணமாக்கும் அயோத்தி படத்தை ஏன் பார்க்க வேண்டும்? ஒரு ரசிகனின் குரல்..!

இந்த பதிவானது மிகவும் தாமதமான பதிவு என்பது மறுக்க முடியாதது. ஆனால், நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று என்பது அதைவிட மறுக்க முடியாதது ஆகும். தமிழ் சினிமா புத்தாண்டு பிறந்த முதல் பல படங்களின் வெளியீட்டை கண்டுவிட்டது. துணிவு, வாரிசு என்று வசூலை குவித்த படங்களும் இந்த 3 மாதங்களுக்குள் ஏராளமாக வந்துவிட்டது.

ஆனால், இந்தாண்டு வெளியான படங்களில் மக்கள் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் படமாக அல்லாமல் நம்மை பாதித்த ஒரு நினைவாக நின்று கொண்டிருக்கும் ஒரே படம் அயோத்தி. இந்த படத்தின் தலைப்பும், படத்தின் டீசருமே ஏதோ ஒன்றை அழுத்தமாக சொல்லப்போகிறது என்பதை உணர்த்தியது. ஆனால், படத்தை பார்த்தபோதுதான் அது அழுத்தமாக மட்டுமின்றி ஆழமாகவும் நம்மில் வேரூன்றியது புரிந்தது.

இன்றைய திரையுலகமானது இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட வார்த்தைகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள், கவர்ச்சி பாடல்கள் என்று நம் அன்றாட வாழ்வில் நாம் சந்திக்காத, நம் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டவைகள் நிறைந்தவைகளாக பெரும்பாலான படங்கள் இருக்கிறது. அதையும் மீறி ஒரு நல்ல படம் வந்தால் அதில் காதல், பாடல், நகைச்சுவை என்று திரைப்படத்திற்கு என்று சில மசாலா விஷயங்கள் சேர்க்கப்பட்டு மசாலா படமாக மாறிவிடுகிறது.

ஆக்ஷன் திரைக்கதை, யதார்த்த திரைக்கதை, அழுத்தமான திரைக்கதை ஆகியவற்றை பற்றி நாம் கேள்விபட்டிருப்போம். முன்னணி ஹீரோக்களின் படங்கள் பெரும்பாலும் ஆக்ஷன் திரைக்கதையே. தமிழ் சினிமாவில் யதார்த்தமான படங்கள் மிகவும் குறைவாகவே வருகிறது. மூன்றாவது அழுத்தமான திரைக்கதை மிக மிக அரிதாகவே நிகழ்கிறது. அப்படியொரு திரைக்கதையை கொண்ட திரைப்படம்தான் அயோத்தி. முதல் காட்சி தொடங்கி இறுதிக்காட்சி வரை காதல், நகைச்சுவை, குத்துப்பாட்டு என்று எந்தவொரு மசாலாத்தனமும் இல்லாமல் (சசிகுமார் தொடக்க சண்டை, காவல்நிலைய பாடல் தவிர) மற்ற காட்சிகள் அனைத்தும் மிக மிக யதார்த்தமாக, அதேசமயம் அழுத்தமாக அமைந்துள்ளது.

இன்றைய சூழலில், தமிழ்நாட்டில் நிகழ்ந்து வரும் வட இந்தியர்கள் விவகாரம், இந்தி மொழி விவகாரம் மத்தியில் அயோத்தி படத்தின் திரைக்கதை சற்று திசை மாறியிருந்தாலும் அதன் கருப்பொருளே சிதைந்திருக்கும். எத்தனை விவகாரங்களை எவ்வளவு அழகாக சொல்ல முடியுமோ அவ்வளவு அழகாக செதுக்கியிருக்கும் படைப்புதான் அயோத்தி. ஷங்கர், ராஜமௌலி, பிரசாந்த் நீல் என்று பிரம்மாண்டங்களின் இயக்குனர்கள் இருந்தாலும், யதார்த்தத்தின் பிரம்மாண்டமாக அயோத்தி இயக்குனர் மந்திரமூர்த்தியை சொல்லலாம். இந்த ஒரு படைப்புக்காக அவருக்கு இந்த பாராட்டு அதிகம் என்றாலும், இப்படி ஒரு படத்திற்காக இந்த பாராட்டு அவசியம்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை எதிர்த்து வரும் சூழலில், படத்தின் பெரும்பாலான காட்சிகள் இந்தியிலேதான் உள்ளது. காதை கிழிக்கும் இசையை பயன்படுத்தாமல், குடும்ப பின்னணிக்கான மெல்லிசையை மட்டுமே படம் முழுக்க தீட்டி, தாயை இழந்த மகள், மததர்மம்தான் பெரிது எனும் தந்தை. மனிதம்தான் பெரிது என நினைக்கும் மனிதன், ஒரு விழா நாளில் சாமானியன் சந்திக்கும் அத்தனை பிரச்சினைகளையும் யதார்த்தத்தை மீறாமல் எந்தளவு ஒருவனால் போராட முடியுமோ அந்த எல்லை வரை சென்று, ரசிகர்களின் மனதின் எல்லையையும் தொட்டுவிட்ட படம்தான் அயோத்தி.

அந்த இறுதிக்காட்சியில் மத தர்மமே வாழும் மனிதன் நாள் முழுவதும் தனக்காக ஓடி, ஓடி உதவி செய்தவன் ஒரு இஸ்லாமியர் என்று தெரிந்ததும் அவன் அந்த இஸ்லாமியரை கட்டியணைத்து அழும் காட்சியில் திரையரங்கமே கண்ணீர் வடித்ததை பார்க்க முடிந்தது. நிச்சயம் இந்த படத்தை திரையரங்கில் குடும்பத்துடன் பாருங்கள். இந்த காலத்தில் இப்படியொரு யதார்த்த படைப்பை அளிக்க முடியும் என்ற இயக்குனரை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்.

ALSO READ | டாடா படத்தின் மாஸ் ஹிட்.. சம்பளத்தை உயர்த்திய கவின்.. ஆஹா இவ்வளவு வருமானமா?