தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திராக வலம் வருபவர் அஜித். ரசிகர்களால் செல்லமாக தல என்று அழைக்கப்படும் இவர் நடிப்பில் தற்போது வெளியான துணிவு படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. சதுரங்க வேட்டை, தீரன் படங்களை இயக்கிய எச்.வினோத் வலிமை படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக நிறைவேற்றவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவும், அஜித்திற்கு ஏற்றவாறும் எச்.வினோத் உருவாக்கிய படமே துணிவு. வங்கிக்கொள்ளையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சாமானியர்கள் வங்கிகளில் சந்திக்கும் பிரச்சினைகளை பற்றி பேசியிருந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது.
துணிவு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து அஜித் அடுத்து நடிக்கும் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. அஜித்தின் அடுத்த படத்தை விக்னேஷ்சிவன் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியான நிலையில், புதிய திருப்பமாக விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, விக்னேஷ் சிவன் கூறியிருந்த கதை அஜித்திற்கு பிடிக்காத காரணத்தால் கதையை மாற்றி எழுதி வருமாறு அஜித் கூறியிருந்தார். ஆனால், கதையை ரெடி செய்வதற்கு விக்னேஷ் சிவன் தாமதம் செய்த காரணத்தாலும், இதுவரை தயார் செய்த கதை பிடிக்காத காரணத்தாலும் தற்போது லைகா நிறுவனம் அஜித் 62வது படத்தை இயக்க வேறு ஒரு இயக்குனரை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இது கோலிவுட் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அதிர்ஷ்டவசமாக யாருக்கு கிட்டும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அனேகமாக அஜித்தின் அடுத்த படத்தை மகிழ் திருமேனி இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.