Thursday, June 1, 2023
HomeசினிமாHeroinesகருமை அழகின் வண்ணமில்லையா..? தடம் புரண்ட தமிழ் சினிமா தன் அடையாளத்தை காட்டுமா…?

கருமை அழகின் வண்ணமில்லையா..? தடம் புரண்ட தமிழ் சினிமா தன் அடையாளத்தை காட்டுமா…?

இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு ஆகும். இந்தியாவைப் பொறுத்தமட்டில் நிறம், உணவு, உடை, பழக்கவழக்கங்கள் என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறும். ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளேயும் ஒவ்வொரு பகுதிக்கும் இவை வேறுபாடும். நிறத்தை பொறுத்தவரை வட இந்தியர்கள் பெரும்பாலும் சிவப்பாகவும், தென்னிந்தியர்கள் மாநிறம், கருப்பாகவும் பெரும்பாலும் காணப்படுவார்கள்.

கருமை நிறம்:

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் நமது சங்க இலக்கியங்களும், நமது முன்னோர்களும் கருப்பு நிறத்தில் இருந்தனர் என்பதே உண்மை. அதற்கான சான்றுகளும், ஆதாரங்களும் ஏராளமாக உள்ளது. ஆனால், இன்றைய இளைஞர்கள் வெள்ளை அல்லது சிவப்பு நிற தோல் கொண்ட பெண்கள் மீதான விருப்பம் அதிகளவில் காணப்படுகிறது.
இதற்கான உளவியல் காரணத்தை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது அதன் பின்னணியில் சினிமாவின் பங்கு மிகப்பெரிய அளவில் உள்ளது என்பதை நாம் உணர முடியும். தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் திரைப்படங்களும், சினிமாவும், சீரியல்களும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகவே மாறிவிட்டது. நமது வாழ்வில் நம்முடைய செயல்பாடுகள் பலவற்றிலும் சினிமாவின் பிரதிபலிப்பு ஏதேனும் ஒரு இடத்திலாவது இருக்கிறது.

வெள்ளை, சிவப்பு தோல் மோகம்:

ஆரம்பகால சினிமாக்களில் அதாவது கருப்பு, வெள்ளை கால படங்களில் நடிப்பவர்களுக்கு மிக அருகில் லைட்கள் அதாவது படப்பிடிப்பிற்கான வெளிச்சம் பயன்படுத்தப்படும். அதற்காக அவர்களுக்கு ஏராளமான மேக்கப் போடப்படும். குறிப்பாக, நாயகிகளுக்கு அதிகளவே பயன்படுத்தப்பட்டது. நாளடைவில் திரைப்படங்களில் வரும் நாயகிகளை போல நமக்கும் மணப்பெண் கிடைக்க வேண்டும் என்று ஆண்களும், அந்த நாயகிகளை போல இருக்க வேண்டும் என்று பெண்களும் ஆசைப்படத் தொடங்கினர்.

அதன் தாக்கமே, அந்த நாயகிகளை வைத்தே அழகுசாதனப் பொருட்கள் விற்பனை விளம்பரப்படுத்தப்பட்டது. தமிழ் சினிமாவில் பெரும்பாலும் வட இந்திய நடிகைகள், வெளிமாநில நடிகைகள் நடிக்கத் தொடங்கிய பிறகும் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கத் தொடங்கியது. அப்போதும், சரிதா போன்ற வெகு சில நடிகைகளே தமிழ் மக்களின் நிறத்தை பிரதிபலிக்கும் வகையில் நடித்தனர்.

Skin Colour Politics Whitness Against Dusky Skin Beauties Colourism In Tamil Cinema Kollywood

உலக அழகி பட்டம் வழங்கியதன் பின்னணி?

ஐஸ்வர்யா ராய்க்கு உலகி அழகி பட்டத்தை வழங்கியதன் பின்னணியில் மிகப்பெரிய வர்த்தக அரசியலே அடங்கியுள்ளது என்பதே உண்மை. ஏனென்றால். ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகி பட்டம் வழங்கிய பிறகு இந்தியா முழுவதும் அவர் பிரபலமானார். அவரை வைத்து ஏராளமான அழகு சாதனப் பொருட்கள் தங்களது பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்தியது. லிப்ஸ்டிக், மேக்கப் கிட்ஸ் என்று பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். கருப்பாக இருப்பதே அழகல்ல என்ற மனநிலை சினிமா மூலமாக ஆழமாக விதைக்கப்பட்டும் உள்ளது. அழகு சாதன பொருட்களின் விற்பனை அதிகரிப்பு அதை நமக்கு நன்றாகவே உணர்த்தும்.

ALSO READ | பிரசாந்த் செய்த தவறையே மோகன் செய்துவிட்டாரா..? பொன்னான வாய்ப்பை நழுவவிட்டு விட்டாரா?

மஞ்சள், பாசிப்பயறு, கடலை மாவு என்று உடலுக்கும், தோலுக்கும் ஆரோக்கியமானவற்றை எடுத்து வந்த நமது பெண்கள் பலரும் வெள்ளை நிறத்தில் மாறுவதற்காக ஏராளமான ரசாயன பொருட்களை எடுத்துக்கொள்கின்றனர். இது ஆரோக்கியத்திற்கு தீங்கானது. சமீபத்தில் அயலி வெப்சீரிஸ் இயக்குனர் பெண்களின் சட்டைகளில் ஏன் பைகள் வைக்கப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்பி, அதற்கு பைகள் வகை்காததால்தான் அவர்கள் ஹேண்ட் பேக் வாங்குகின்றனர் என்ற வர்த்தக அரசியலை விளக்கியிருப்பார்.

Skin Colour Politics Whitness Against Dusky Skin Beauties Colourism In Tamil Cinema Kollywood

மாறுமா தமிழ் சினிமா?

அதுபோலத்தான் கருமை நிறம் என்பது அழகல்ல என்ற விஷமத்தை பரப்பி, சிவப்பு நிற தோலுக்காக ஏராளமான அழகுசாதன பொருட்களை தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் விற்பனை செய்துவிட்டனர் என்பதே உண்மை. இது வர்த்த ரீதியாக வெற்றி பெற்றாலும், உளவியல் ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஒரு பெண்ணோ, ஆணோ கருப்பாக இருந்தாலோ, ஒல்லியாகவோ, குண்டாக இருந்தாலோ, வழுக்கை, சொட்டைத் தலையாக இருந்தாலோ அவர்களை கேலிச்சித்திரமாக தமிழ் சினிமா காட்டியதன் பின்னணி அந்த தோற்றத்ததில் உள்ள பலரும் தாழ்வு மனப்பான்மையில் அவதிப்படும் நிலைக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழர்களின் பண்பாட்டை, தமிழ்நாட்டின் வரலாற்றை பேசும் படங்கள் என்று கொண்டாடப்படும் படங்களை நீங்கள் திரும்பி பார்த்தாலும் அதில் வரும் நாயகிகளின் நிறம் உங்களுக்கு நிற அரசியலை உணர்த்தும். இனி வரும் காலங்களிலாவது தமிழ் சினிமா யதார்த்த நிலைக்கு மாறுமா? அரை நூற்றாண்டுக்கு மேலாக நமது தமிழ் இனத்தின் அடையாளமான கருப்பு நிறத்திற்கு எதிராக தெரிந்தோ, தெரியாமலோ நடத்தப்பட்டு வரும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா?