பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் இன்று வெளியாகியது. கிரெடிட் கார்டு, வங்கிக்கடன் ஆகியன குறித்து ஒரு விழிப்புணர்வு படமாக வெளியாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் ஒன்று இன்றைய தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதாக அமைந்துள்ளது. துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சமுத்திரக்கனி, மத்திய அரசை சேர்ந்த அதிகாரி ஒருவரைப் பார்த்து “ரவீந்தர் இது தமிழ்நாடு… உங்க வேலைய இங்க காட்டாதீங்க” என வசனம் ஒன்றை பேசுகிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசுக்கு தொடர்ந்து இடையூறு தரும் வகையில் பல்வேறு இன்னல்களை அளித்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில், துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் உள்ளதாக பதிவிட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசு தயாரித்து வழங்கிய ஆளுநர் உரையில் அண்ணா, பெரியார், கலைஞர், அம்பேத்கர், காமராஜர் போன்ற வார்த்தைகளை படிக்காமல் ஆளுநர் தவிர்த்ததும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பதிலடி தந்ததும் அதற்கு ஆளுநர் பாதியிலே வெளியேறி சென்றதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
எச்.வினோத் இயக்கியுள்ள துணிவு படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தை தமிழ்நாடு முழுவதும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தில் அஜித்குமாருடன் நடிகை மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, பிரேம், பக்ஸ், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வழக்கமாக வியாழக்கிழமையே அஜித்தின் படங்கள் வெளியாகி வந்த நிலையில், புதன்கிழமை வெளியான இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.