இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்த காலத்தில் வங்கிக்கணக்கு உள்ள அனைவரிடமும் ஏ.டி.எம். கார்டு உள்ளது. மேலும், அவர்களில் பெரும்பாலனவர்களிடம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளது. பெரும்பாலான ஏ.டி.எம். கார்டுகளே டெபிட் கார்டாகவே பயன்படுத்தும் வசதியுடன் உள்ளது.
அதே நேரத்தில் டெபிட்கார்ட் மூலமாக மோசடி நடக்கவும் வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. அதை எப்படித் தடுக்கலாம் என்று கீழே காணலாம். கிரெடிட், டெபிட் கார்டு மூலம் மோசடி நடப்பது அதிகரித்துள்ளது. இது போன்ற நிகழ்வுகளை தடுக்க, ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு விவரங்களை சேமித்து வைக்கக்கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாகவே டோக்கனைசேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
டோக்கனைசேஷன் அப்படினா என்ன?
- வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பணப்பரிவர்த்தனை செய்யும்போது, தங்களின் கார்டுகள் குறித்த முழுமையான விவரங்களை தெரிவிக்காமல், பணத்தை மட்டும் அனுப்பி பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்வதே டோக்கனைசேஷன் ஆகும்.
- இந்த முறையில் வாடிக்கையாளர்களின் விவரங்கள் அனைத்தும் ஆன்லைன் நிறுவனங்களால் பார்க்க முடியாத வகையில் மறைக்கப்படும்.
- அதுமட்டுமல்லாமல் ஆன்லைன் நிறுவனங்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களின் விவரங்களைச் சேகரித்து வைத்திருந்தால், அதையும் அழித்திட முடியும்.
- அதாவது டெபிட், கிரெடிட் கார்டுகளில் வாடிக்கையாளர் பெயர், சிவிவி, வேலிடிட்டி காலம் என எதையும் சேமிக்க விடாமல் பாதுகாக்கும்.
செயல்பாடு எப்படி? - டோக்கனைசேஷனில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் உள்ள 16 இலக்க எண் மறைக்கப்பட்டுவிடும்.
- அதற்குப் பதிலாக ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தனியாக டோக்கன் எண் வழங்கப்படும் (அதாவது OTP எண் போன்று வழங்கப்படும்) இந்த டோக்கன் ஒவ்வொரு ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துக்கு வேறுபடும்.
இதன் மூலம் உங்கள் ஆன்லைன் பரிவர்த்தனை எளிதாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். இனி நீங்கள் மூன்றாம் தரப்பினருடன் உங்கள் கார்டு விவரங்களை பகிர தேவையில்லை.
பாதுகாப்பா?
டோக்கனைசேஷனில் டெபிட், கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்களை ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் பார்க்கவோ, சேமிக்கவோ முடியாது. எனவே டோக்கனைசேஷன் பாதுகாப்பானது தான். இந்த முறையில், அதிகமாக பணமோ அல்லது பரிமாற்றமோ செய்யும்போது விரைவாகவும், பாதுகாப்பாகவும் பரிமாற்றம் செய்ய முடியும்.
ஆன்லைன் பரிமாற்றம், ஆப்ஸ் மூலம் பரிமாற்றம் ஆகியவற்றுக்கு எளிமையாக பயன்படுத்த முடியும். இந்த டோக்கனில் எந்தவிதமான தனிப்பட்ட விவரங்களும் இருக்காது, டோக்கன் எண்ணும் மாறிக்கொண்டே இருக்கும்.