Monday, September 27, 2021
Home Blog

தோல்வியில் முடிந்த டிரம்பின் முயற்சி.. அசுர வளர்ச்சி அடைந்த வடகொரியா.. பிடனுக்கு காத்திருக்கும் சவால்!

joe biden

வடகொரியாவின் பொருளாதாரத்தை உலக நாடுகளிடம் இருந்து துண்டிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முயற்சிக்கு ஓரளவு வெற்றி கிடைத்தாலும் கூட இந்த நடவடிக்கை வடகொரியாவின் ராணுவத்தை மேம்படுத்தும் கிம் ஜோங் உன்னின் முயற்சியில் வெளிநாடுகளை நாடியிருக்காமல், உள்நாட்டிலேயே ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியை துரிதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடன் நிர்வாகத்துடன் வடகொரியா எப்படியான அணுகுமுறையை மேற்கொள்ள போகிறது என்கிற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. இதற்கிடையே கிம் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Workers’ Party) கூட்டத்தை, அடுத்தமாதம் அவர் நடத்த இருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில், இந்த கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறை. ஜோ பிடன் அடுத்த மாதம் அதிபராக பதவியேற்க இருக்கும் சூழலில் கிம் நடத்தவுள்ள இந்த கூட்டம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் விதமாக கிம் பல்வேறு ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு இருக்கிறார். மேலும் அதுபோன்ற ஆணுஆயுதங்களை நாடு முழுவதும் கொண்டு செல்ல பயன்படும் வகையிலான வாகனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. மற்றும் நீர்மூழ்கி கப்பல்களையும் உருவாக்கி வருவதாக நம்பப்படுகிறது.

பல்வேறு சர்ச்சைகளை கடந்து கிம் ஜோங் உன் மீண்டும் அவருடைய முன்னேற்ற நடவடிக்கைகளை தொடங்க வாய்ப்புள்ளது. அதுகுறித்த அறிவிப்புகள் பாரம்பரிய புத்தாண்டு தின உரையின் போதோ அல்லது மற்றொரு ஏவுகணை சோதனையின் வாயிலாகவோ இருக்கலாம். ஒருவேளை அப்படி நடைபெற்றால் அமெரிக்காவின் கடந்தகால முயற்சிகள் தோல்வியடைந்ததாக ஜோ பிடனுக்கு அனுப்பும் ஒரு சமிக்ஞையாக இருக்கலாம். ஆயுதங்கள் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள் முதல் எண்ணெய் மற்றும் வெளிநாட்டு பணம் வரை அனைத்தையும் அணுகுவதற்கான தடைகள் இருந்தபோதிலும் கூட, வடகொரியாவின் புதிய ஆயுத உற்பத்திக்கு தேவையான பொருட்களில் பெரும்பாலானவை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடந்த இரண்டு தசாப்தங்களில் வடகொரியா மீது விதிக்கப்பட்ட மிகப்பெரிய பொருளாதார தடையாக இருந்தபோதிலும் டிரம்பின் எந்த ஒரு அழுத்தங்களும் கிம் ஜோங் உன்னை தன்னுடைய ஆயுத திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வைத்ததாக சிறிய அறிகுறியும் இல்லை. 36 வயதாகும் கிம் அடுத்த ஆண்டுடன் தான் பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த 10 ஆண்டுகளில் தன்னுடைய தந்தை மற்றும் தாத்தாவை விட அதிக அளவிலான அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டுள்ளார். இதனால் பிடன் நிர்வாகத்தால் கூட அமெரிக்காவின் நீண்டகால கோரிக்கையான அணு ஆயுத சோதனைகளை மொத்தமாக கைவிட வேண்டும் என்பதை நிறைவேற்றுவது கடினம். அதற்கு பதில் தற்காலிமாக அந்த திட்டங்களை ஒத்திவைக்க மட்டுமே முடியும்.

அணு ஆயுத பயன்பாடு:

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் வடகொரியா எந்த ஒரு அணு ஆயுதங்களையும் வெடிக்க செய்து சோதனை செய்யவில்லை என்றாலும், அமெரிக்காவின் ஏவுகணை எதிர்ப்பு கப்பல்களுக்கு நிகரான போர்கப்பல்களை உருவாக்கும் பணிகளை தொடர்ந்து செய்து வருவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். வடகொரியா அதன் ஏவுகணை போர்கப்பல்களில் பொருந்தும் வகையில் சிரியதாக்கப்பட்ட அணுசக்தி சாதனங்களை உருவாக்கியிருக்கலாம்” என்று ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிபுணர் குழு இந்த ஆண்டு தொடக்கத்தில் கூறியிருந்தனர். நிபுணர்களின் கூற்றுப்படி, தலைநகர் பியோங்யாங்கில் அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உருவாக்கும் திறன்கள் உள்ளன, அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்க தேவையான இணைவு எரிபொருள்கள் டியூட்டீரியம் மற்றும் ட்ரிடியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளன. 2017 ஆம் ஆண்டு கிம் நடத்திய அணு ஆயுத சோதனையில் பயன்படுத்திய அணுகுண்டு 1945 ஆம் ஆண்டு ஜப்பான் மீது அமெரிக்கா வீசியதை விட 10 மடங்கு சக்திவாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

பாலிஸ்டிக் ஏவுகணைகள்:

கிம் ஜோங் உன் ஆட்சி காலத்தில் சமீபத்திய ஆண்டுகளில் பல புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்கியுள்ளனர், அவை எல்லாம் சக்திவாய்ந்த, மற்றும் கொண்டு செல்ல எளிதாக இருக்குமாறும் வடிவமைக்கப்பட்டவை. அக்டோபர் மாதம் பியோங்யாங்கில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில்,கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணையை அறிமுகப்படுத்தியிருந்தார். 2019 ஆம் ஆண்டில், வட கொரியா இரண்டு அடுக்கு புகுசாங் ஏவுகணையையும் சோதனை செய்தது. மேலும் 28,500 அமெரிக்க துருப்புக்கள் உட்பட ஒட்டுமொத்த தென்கொரியாவையும் சில நிமிடங்களில் தாக்கி அளிக்க கூடிய மல்டி ஹைப்பர்சோனிக் கே.என் -23 ஏவுகணைகளையும் கிம் பரிசோதனை செய்துள்ளார். இதன் மூலம் கடந்த காலங்களில் டிரம்ப் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலன் கொடுத்ததாக தெரியவில்லை. அடுத்து வரும் பிடன் நிர்வாகத்திற்கு இதனால் பெரிய சவால் காத்திருக்கிறது.

என்னதான் நடக்குது? அடுத்தடுத்து வீரர்களுக்கு ஏற்படும் காயம்.. இந்திய அணியில் நீடிக்கும் சிக்கல்

From bhuwaneshwar kumar to umesh yadhav, list of injured indian players

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதாவிற்கு காயம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து இந்திய டெஸ்ட் அணிக்கான முக்கியமான 4 வேகப்பந்து வீச்சாளர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய அணியில் என்ன தான் நடக்கிறது என்கிற குழப்பம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் இருந்தே இந்திய அணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது தொடர்கதையாகி இருந்து வருகிறது. முதலில் ஹைதராபாத் அணியில் இடம்பெற்று இருந்த புவனேஸ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டு அவர் ஐபிஎல் தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அவருடைய காயம் குணமடையாததை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கப்பட்டார். அவரை போலவே டெல்லி அணியில் இடம்பெற்ற இஷாந்த் ஷர்மா ஐபிஎல் தொடரின் போது காயம் காரணமாக வெளியேறியதால் அவர் தன்னுடைய பிட்னஸை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவரால் ஆஸ்திரேலியா செல்ல முடியவில்லை. தேசிய கிரிக்கெட் அகாடமியில் அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தபோதும் கூட டெஸ்ட் தொடரில் இஷாந்த் ஷர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் 2 முக்கிய பவுலர்கள் இல்லாமல் இந்திய அணி எப்படி சமாளிக்க போகிறது என்கிற கேள்வி எழுந்தது.

அதேபோல இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மாவும் காயம் காரணமாக இந்த தொடரில் முதலில் சேர்க்கப்படவில்லை. அதன் பின்னர் நீண்ட சர்ச்சைகளுக்கு பிறகே டெஸ்ட் அணியில் மட்டும் ரோஹித் ஷர்மாவின் பெயர் இடம்பெற்றது. அதுவும் கடைசி 2 போட்டிகளில் மட்டுமே அவரால் விளையாட முடியும். ஆரம்பம் தான் அப்படி என்றால் ஆஸ்திரேலியா சென்றதும் டி20 அணியில் இடம்பிடித்திருந்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டதால் அவரும் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாகவே நடராஜனுக்கு இந்திய அணியில் முதலில் வாய்ப்பு கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் நவ்தீப் சைனியும் முழு உடல் தகுதியுடன் இல்லை என்று சொல்லப்பட்டது. அவரும் அவ்வப்போது காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அவரையும் முழுமையாக நம்ப முடியாது.

ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்த நிகழ்வு:

முதல் டி20 போட்டியின் போது ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து மீதமிருந்த இரண்டு டி20 மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்காமல் ஒய்வு கொடுக்கப்பட்டிருந்தது. எப்படியோ ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை நிறைவு செய்த இந்திய அணிக்கு முதல் டெஸ்ட் போட்டியில் மீண்டும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. மூத்த வீரர் முகம்மது ஷமிக்கு இரண்டாவது இன்னிங்சில் கையில் காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவரும் டெஸ்ட் தொடரில் இருந்து வெளியேறினார்.

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷமிக்கு பதில் சிராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது உமேஷ் யாதவிற்கும் காயம் ஏற்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் பெரிதாக ஆதிக்கம் செலுத்தாத உமேஷ் யாதவ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் முதல் விக்கெட் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். ஆனால் அதற்குள்ளாகவே எட்டாவது ஓவரில் அவருக்கு காயம் ஏற்பட அவரும் போட்டியின் பாதியிலேயே வெளியேறிவிட்டார்.

இதன் காரணமாக இந்திய அணி 2 வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீதமிருக்கும் போட்டிகளில் உமேஷ் யாதவ் விளையாடுவாரா என்பதும் சந்தேகமே. இப்படிப்பட்ட சூழலில் இந்திய அணியில் பும்ரா மட்டுமே ஒரே அனுபவ வீரர். சிராஜ்க்கு இதுதான் முதல் டெஸ்ட் போட்டி, மீதமிருக்க கூடிய சைனியும் முழு பார்மில் இல்லை. வலை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் நடராஜனை பயன்படுத்தினாலும் அவருக்கும் அது முதல் டெஸ்ட் போட்டியாகவே இருக்கும். ஏற்கனவே கேப்டன் கோலி இல்லாத சூழலில் முக்கிய பவுலர்கள் யாரும் இல்லாமல் இந்திய அணி மீதமுள்ள போட்டிகளை எப்படி எதிர்கொள்ள போகிறது என்கிற கேள்வி எழுந்துள்ளது. வீரர்களுக்கு இப்படி தொடர்ந்து காயம் ஏற்படுவதும் தொடரில் இருந்து வெளியேறுவதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வரும் இந்த நேரத்தில் இந்திய அணியை பலவீனமாக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

நகர்ந்து வரும் மிகப்பெரிய பனிப்பாறை.. திடீரென எழுப்பப்பட்ட அபாய ஒலி.. A68a பற்றிய முழு விளக்கம்

Experts concern about giant Antarctic iceberg A68a

அண்டார்டிகாவில் இருந்து மிகப்பெரிய ஐஸ்கட்டி பாறையான A68 நகர்ந்து வருவது பென்குயின் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதிலும் பல்வேறு பிரச்சனைகளும் கால நிலை மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 100 ஆண்டுகளில் மட்டும் பூமியின் வெப்பநிலை 1.5 செல்சியல்ஸ் அளவிற்கு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2050 ஆம் ஆண்டிற்குள் இது 2 டிகிரி செல்ஸியல்சாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்படி உயரும் வெப்பநிலை காரணமாக அண்டார்டிகா பகுதிகளில் பனிப்பாறைகள் உடைந்து கடலில் கலந்து வருகின்றன. இதன் காரணமாக கடல் மட்டம் அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 5,800 சதுர கிமீ பரப்பளவு கொண்ட மிகப்பெரிய பனிப்பாறை ஒன்று அண்டார்டிகா பகுதியில் பெயர்ந்து நகர தொடங்கியது. இந்த பனிப்பாறைக்கு தான் ஆய்வாளர்கள் A68 என பெயரிட்டுள்ளனர். இந்த ஆண்டு கடல் நீரோட்டம் காரணமாக, இந்த A68 பனிப்பாறை தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் நகர்ந்து அதன் பின்னர் அது தெற்கு ஜார்ஜியாவின் தொலைதூர துணை அண்டார்டிக் தீவை நோக்கி நகர்ந்து செல்வதாக கணிக்கப்பட்டுள்ளது, இந்த பனிப்பாறை அங்கிருக்கும் தீவின் ஏராளமான வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது குறித்த அச்சத்தைத் தூண்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பாறைகள் தற்போது கடல் நீரோட்டங்களுடன் பயணிக்கின்றன, பின்னர் அது ஆழமற்ற பகுதியில் சிக்கிக்கொள்ளலாம் அல்லது அதுவாகவே சென்று கரை ஒதுங்கலாம்.

Experts concern about giant Antarctic iceberg A68a

A68a என்றால் என்ன, அது எங்கு செல்கிறது?

அமெரிக்காவின் ஒரு மாகாணத்தின் அளவுள்ள பனிப்பாறை தான் A68a. 2017 ஆம் ஆண்டு ஜூலையில் அண்டார்டிகாவின் லார்சன் சி பகுதியில் இருந்து பிரிந்து சென்றது. அப்போது இருந்தே இது தொலைதூர தீவான தெற்கு ஜார்ஜியாவை நோக்கி நகர்கிறது, இது பிரிட்டிஷ் சர்வதேச கடல் பிராந்தியத்தில் உள்ள பகுதியாகும். அந்த பனிப்பாறையின் பயணத்தின் போது பல பகுதிகள் சிறு சிறு பாறைகளாக பிரிந்து சென்றுள்ளன. முன்பு சொன்ன A68 பனிப்பாறையின் மிகப்பெரிய பகுதி தான் A68a என அழைக்கப்படுகிறது. இது மட்டுமே 2,600 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது.

கடந்த வாரம், அமெரிக்காவின் தேசிய பனி மையம் (யு.எஸ்.என்.ஐ.சி) (பனிப்பாறைகள் பெயரிடுவதற்கு இந்த யு.எஸ்.என்.ஐ.சி அமைப்பு தான் பொறுப்பாகும், அவை அண்டார்டிக் பகுதியின் பனிப்பாறைகள் கண்டறியப்படும் பகுதிகளை வைத்து பெயரிட்டு வருகின்றன.) இப்போது A68a இலிருந்து இரண்டு புதிய பனிப்பாறைகள் உடைந்து சென்றுள்ளன என்பதையும் அவை பெயரிடப்பட்டு கண்காணிக்க போதுமானவை என்றும் கூறியுள்ளது . அந்த உடைந்த பனிப்பாறைகளுக்கு A68E மற்றும் A68F என பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.

இப்போது அச்சப்பட வேண்டியது என்னவென்றால், பனிப்பாறை தீவுக்கு அருகில் கரை ஒதுக்கினால் அது உள்ளூர் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். அடுத்த மாதம் சுற்றுச்சூழல் அமைப்பில் A68a பனிப்பாறையின் தாக்கத்தை ஆய்வு செய்வதற்கான ஒரு ஆராய்ச்சி பணியைத் தொடங்கவுள்ள பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே (BAS) இன் சூழலியல் வல்லுநர்களின் தகவலின் படி, பனிப்பாறை தீவின் அருகே சிக்கிக்கொண்டால், பென்குவின்கள் மற்றும் சீல்ஸ் போன்ற உயிரினங்கள் உணவு தேடி அதிக தூரங்கள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும். சில நேரங்களில் அதன் சந்ததியினர் பட்டினியில் கிடப்பதை தடுக்க சரியான நேரத்தில் திரும்பி வர முடியாத நிலை கூட ஏற்படலாம் என்று கூறியுள்ளனர்.

பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே அமைப்பின் கூற்றுபடி, பனிப்பாறையின் பிளவு ஒரு இயற்கையான நிகழ்வு என்று கருதப்படுகிறது, ஆனால் அது காலநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படவில்லை. இருப்பினும் அண்டார்டிகா பகுதியில் ஏற்படும் வெப்பமயமாதல் எதிர்காலத்தில் அதிகப்படியான பனிப்பாறை பிளவுகள் மற்றும் பனிப்பாறைகள் கரைந்து கடலில் கலக்கும் நிகழ்வுகளை குறிக்கும் என்றும் சில சோதனை மாதிரிகள் கணித்துள்ளன.

இதற்கிடையே புவி வெப்பமயமாதல் நிகழ்வை தடுக்கும் பொருட்டு உலகின் வல்லரசு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்படுத்தின. ஆனால் டிரம்ப் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியிருந்தார். இப்போது ஜோ பிடன் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கும் நிலையில் மீண்டும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்காவை இணைக்கும் நடவடிக்கை தொடங்கும் என உறுதி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிலைமை சரியில்லை.. இப்படியே போனால் ஆஸ்திரேலியா-சீனா உறவு மோசமாகும்.. எச்சரிக்கும் நிபுணர்கள்

2021 will be worst year for australia - china relationship says expert

சிட்னி: ஆஸ்திரேலியா- சீனா இடையேயான உறவு வரும் 2021 ஆம் ஆண்டு மேலும் மோசமடைவதற்கு வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆஸ்திரேலியா தாமாக முன்வந்து நிலைமையை சரிசெய்யாத வரை எதுவும் மாறப்போவதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சீனா ஆஸ்திரேலியா இடையே கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே கொரோனா வைரஸ் காரணமாக ஆஸ்திரேலியா பொருளாதாரம் மிக கடுமையாக பாதித்தது. இதனால் கொரோனா வைரஸ்க்கு காரணம் சீனா தான் என நேரடியாகவே குற்றம்சாட்டியது. மறுபக்கம் சீனாவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக சீனாவுக்கு எதிரான நாடுகளுடன் இணைந்து கூட்டு கடற்பயிற்சியிலும் ஆஸ்திரேலியா ஈடுபட்டது. சமீபத்தில் ஆஸ்திரேலியா மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய சைபர் தாக்குதலின் பின்னணியில் சீனாவில் இருந்து செயல்படும் ஹேக்கர்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டியது.

இப்படி நாளுக்கு நாள் சீனா – ஆஸ்திரேலியா உறவு மோசமாகிக்கொண்டே இருந்த நேரத்தில் சீன நிறுவனமான ஹுவாவே நிறுவனத்துக்கு 5ஜி தொழில்நுட்பத்திற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் அனுமதி மறுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சீனாவும் ஆஸ்திரேலிய இறக்குமதி சிலவற்றுக்கு தடை விதித்தது. சீன நிறுவனங்கள் மீது ஆஸ்திரேலியா பாகுபாடு காட்டுவதாகவும் கூறியிருந்தது. இதன் பின்னர் ஆஸ்திரேலிய பிரதமரை கிண்டல் செய்யும் விதமாக கேலி சித்திரத்தை சீன ஊடகம் வெளியிட்டதற்கு ஆஸ்திரேலியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் அதை சீனா கண்டுகொண்டதாக தெரியவில்லை.

ஆஸ்திரேலியா சுமார் 40 சதவீத ஏற்றுமதியை சீனாவுக்கு அனுப்புகிறது, 2019-2020 ஆம் ஆண்டில் மட்டும் 240 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பில் இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுத் சீனா மார்னிங் போஸ்ட் இதழுக்காக எழுதிய ஜான் பவர், இந்த மோசமான நிலைகளுக்கிடையில் துரதிர்ஷ்டவசமாக 2021 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கும் இடையே பதட்டம் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளார். சீனாவின் ஓநாய் வீரர்களின் ராஜதந்திர நடவடிக்கைகளும், 20 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புள்ள அந்நாட்டு இறக்குமதி பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தடை ஆஸ்திரேலியாவை மேலும் தூண்டிவிட்டது போல் ஆகிவிட்டது. சீனாவின் பொருளாதார வற்புறுத்துதலுக்கு பதில் நடவடிக்கையாக ஆஸ்திரேலியா சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுக்கும் அதே நேரத்தில் இருநாடுகளும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு முக்கிய மதிப்பை கொடுக்கும் எந்த ஒரு சமரச முயற்சியையும் நிராகரிக்கவும் முடியும் என்றார்.

ஆஸ்திரேலியாவின் பார்வையில், அதிகரிக்கும் பதட்டத்தை பார்க்கும் பொழுது சீனாவுடனான உறவை ஏற்றுக்கொள்வது மிகக்குறுகிய காலத்தில் மேம்படாது. அவற்றை சரிசெய்ய வேண்டும் என்றால் நாம் குறிப்பிடத்தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகளுக்கான ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்திற்கு வருகை தரும் கவுரவ பேராசிரியர் டொமினிக் மீஹர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், பெய்ஜிங்கில் உள்ள பாங்கோல் இன்ஸ்டிடியூஷனின் மூத்த உறுப்பினரான மற்றொரு அறிஞர் கிண்டுவோ சூ இதுபற்றி கூறுகையில், கொரோனா தொற்று தொடர்பான சர்வதேச விசாரணையை கோரும் ஆஸ்திரேலியாவின் கோரிக்கை என்பது உண்மைகளை தெரிந்துகொள்வதை விட சீனாவை குறிவைப்பதாகும் என தெரிவித்தார். தனக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் கொள்கைகளுக்கு சீனா ஆக்ரோஷமாக பதிலளிக்கும். ஆஸ்திரேலியா-சீனா உறவுகள் குறித்து ‘\நம்பிக்கையுடன் இருப்பது கடினம் என்றும், ஆஸ்திரேலியா உறவுகளை சரிசெய்ய முன்முயற்சி எடுக்காவிட்டால் எதிர்வரும் ஆண்டில் அந்நாட்டின் ஏற்றுமதிகள் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் சூ கூறினார்.

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கொள்கை வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ளவும், அவற்றை சரி செய்யும் முயற்சியில் சீனாவின் பக்கம் சிறிதளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ராஜதந்திர மற்றும் கொள்கை நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா எந்த விருப்பமும் காட்டாமல் இருப்பது இருநாட்டு உறவிலும் முன்னேற்றம் ஏற்படும் என்கிற நம்பிக்கையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சிட்னியின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலியா-சீனா உறவுகள் நிறுவனத்தின் இயக்குனர் ஜேம்ஸ் லாரன்சென்சன் கூறினார்.

சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று 2028 ஆம் ஆண்டிற்குள் சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தில் முதலிடம் பிடிக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான ஒரு சூழ்நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து சீனாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது அந்நாட்டின் ஏற்றுமதியை பெருமளவில் பாதிக்க வாய்ப்புள்ளது.

கோலியின் இடத்தை நிரப்புவாரா ஜடேஜா? இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி பற்றிய முழு அலசல்

will jadeja fulfill kohli's absence against australia?

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி மற்றும் முக்கிய பவுலர் முகமது ஷமி இல்லாத நிலையில் நாளைய போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணி குறித்து பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் தான், விராட் கோலி மற்றும் ஷமிக்கு மாற்று மட்டும் இல்லாமல், மேலும் சில முக்கிய மாற்றங்களும் இந்திய அணியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது நாளைய தொடரில் இந்திய அணிக்கு பலன் கொடுக்குமா என்பதில் பெரிய கேள்வி எழுந்துள்ளது. நாளை நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் போட்டியில் ஆடிய பிரிதிவி ஷாக்கு பதில் ஷப்மன் கில்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விரிதிமான் சகாவுக்கு பதில் ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ஷமிக்கு பதிலாக முகமது சிராஜ் களமிறங்குகிறார். இந்த நிலையில் தான் முக்கியமாக கேப்டன் விராட் கோலிக்கு பதில் ஜடேஜா நாளைய போட்டியில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதுதான் இந்திய அணியின் ஆட்டத்தையே மொத்தமாக மாற்றும் என கணிக்கப்படுகிறது.

கோலியின் இடத்தை நிரப்புவாரா ஜடேஜா ?

இடதுகை ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டங்கள் சமீப காலங்களாக பெரிய அளவில் முன்னேறி இருந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் கோலி போன்று நிலையான ரன்களை அவர் அடிப்பாரா என்பது சந்தேகம் தான். ஆனால் கடந்த காலங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய பொழுது ஜடேஜா தன்னுடைய பங்களிப்பை சிறப்பாகவே செய்திருக்கிறார். ஜடேஜாவின் தேர்வில் இருக்க கூடிய மற்றொரு பலன், ஐந்தாவது பவுலிங் வாய்ப்பு. மெல்போர்ன் மைதானம் சமீப காலங்களாக ஸ்லோ பிட்சுக்கு சாதகமாக மாறியுள்ளது இதனால் அணியில் கூடுதல் ஸ்பின்னர்கள் இருப்பது விக்கெட் எடுப்பதிலும் ரன்களை கட்டுப்படுத்துவதிலும் கூடுதல் பலம் சேர்க்கும்.

will jadeja fulfill kohli's absence against australia?

அறிமுக வீரர் ஷப்மன் கில் :

முதல் டெஸ்ட் போட்டியில் பிரிதிவி ஷா எடுக்கப்பட்டு அவர் வழக்கம் போல சொதப்பிய போதே இரண்டாவது போட்டியில் நிச்சயம் அவருக்கு மாற்று இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது தான். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பிரிதிவி ஷாவின் தொழில்நுட்ப குறைபாடு முதல் டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்தது. இதனால் இந்தியாவின் தொடக்கமே 2 இன்னிங்சிலும் மோசமாக அமைந்தது. இதனால் அவருக்கு மாற்றாக ஷப்மன் கில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் பேட்டிங்கில் திறமையான வீரரும் கூட, அதேசமயம் ஆஸ்திரேலியாவின் இப்போதைய சூழலுக்கு பொருந்திப்போக கூடியவர். கோலி போன்ற அதிரடி பேட்ஸ்மேன் இல்லாத நிலையில் இவர் மூலம் ஒரு வலிமையான ஓப்பனிங் கொடுக்க முடியும்.

பண்ட் – சாகா போட்டி:

இந்திய அணியில் தோனியின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளில் விரிதிமான் சாகா தான் தொடர்ச்சியாக விக்கெட் கீப்பராக இருந்து வருகிறார். கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சாகா பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் படியான பங்களிப்பை கொடுக்கவில்லை. அதேநேரம் அடுத்த தோனி என புகழப்பட்ட ரிஷப் பண்ட் நிலையான ஆட்டங்களை கொடுக்க தவறியதால் இந்திய அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டார். ஆனால் பயிற்சி போட்டிகளில் பண்ட் அதிரடியாக ஆடியதால் இந்த முறை அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. போன போட்டியில் இந்தியா நிதானமாக ஆடியதால் நாளைய போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கு ரிஷப் பண்ட் தான் சரியான தேர்வாக இருப்பார்.

முகம்மது சிராஜின் தொடக்கம் :

தன்னுடைய தந்தையின் மரணத்திற்கு கூட செல்ல முடியாமல் நாட்டுக்காக விளையாடுவது முக்கியம் என ஆஸ்திரேலியாவிலேயே தங்கியிருந்த முகம்மது சிராஜின் கனவு நிறைவேறும் தருணம் வந்துவிட்டது. தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் நாளை களமிறங்க இருக்கிறார் இளம் வீரர் சிராஜ். ஷமியின் இழப்பு இந்திய அணியின் பவுலிங் தாக்குதலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அதே நேரம் சரியான வழிகாட்டல் இருந்தால் சிராஜ் சரியான லென்தில் ஸ்விங் பால் வீசக்கூடியவர். முதல்தர போட்டிகளில் சைனியை விட சிராஜ் அதிக ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார். நாளை புதிய பந்தில் உமேஷ் யாதவ் மற்றும் சிராஜ் கூட்டணியை பயன்படுத்த வாய்ப்புள்ளது. ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்திருந்தால் சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும்.

கே.எல்.ராகுல் நிலை என்ன ?

இந்திய அணியில் மாற்று வீரராக இடம்பெற்று பின்னர் ரிஷப் பண்டின் மோசமான ஆட்டத்தால் நிரந்தர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எனும் இடத்தை பிடித்தார் கே.எல்.ராகுல். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சந்தேகத்திற்கிடமின்றி கே.எல்.ராகுல் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் அவரை அதிகம் பயன்படுத்தாமல் இருந்து வந்தனர். இது ராகுலின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் தொடர். பிரிதிவி ஷா ஓப்பனிங் தடுமாறிய நிலையில் அவருக்கு மாற்றாக தொடக்க வீரராகவும், விராட் கோலி இல்லாத நிலையில் மிடில் ஆர்டரிலும் கூட ராகுலை பயன்படுத்த முடியும்.

இருப்பினும் குறிப்பிட்ட ஓவர் போட்டிகளில் நல்ல பங்களிப்பை கொடுத்தாலும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இப்போது இருக்கும் நிலையில் ராகுலை பயன்படுத்துவது கொஞ்சம் ரிஸ்க் தான். வெளிநாட்டு மண்ணில் தொடக்க வீரராக கே.எல்.ராகுல் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. மிடில் ஆர்டரில் களமிறக்கினாலும் அவரால் பவுலிங் செய்யவும் முடியாது. கூடுதல் ஸ்பின் பவுலர் தேவைப்படும் இடத்தில் ஜடேஜாவை பயன்படுத்துவதே இந்திய அணிக்கும் உபயோகமாக இருக்கும்.

ஹாலிவுட் படங்களை விட டிவிஸ்ட்.. அமெரிக்க அரசியல்வாதிகளை நடுங்க வைத்த சீன பெண் உளவாளி.. கண்டுபிடித்த எப்.பி.ஐ

How chinese spy make close tie with american politicians

வாஷிங்டன் : சீனாவை சேர்ந்த பெண் உளவாளி ஒருவர் அமெரிக்காவின் பல உயர்மட்ட அரசியல்வாதிகள், மேயர்களை குறிவைத்து தன்னுடைய வலையில் வீழ்த்தி தகவல்களை பெற முயற்சி செய்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்குரிய அந்த சீன உளவுத்துறையை சேர்ந்த பெண் அரசியல் அதிகாரத்திற்கு அருகாமையில் இருப்பதற்காக 2011 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலத்தில் பல உள்ளூர் மற்றும் தேசிய அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார் என்று தற்போதைய மற்றும் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த நடவடிக்கைக்கு பின் இருந்த பெண் சீனாவை சேர்ந்த கிறிஸ்டின் ஃபாங் என கண்டறியப்பட்டுள்ளது. இவர் சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் நாட்டின் முக்கிய சிவில் உளவு நிறுவனம் சார்பாக செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

அந்த அறிக்கையின் படி, ஃபாங் கலிபோர்னியாவின் பே ஏரியாவில் பிரச்சார நிதி திரட்டல், விரிவான தொடர்புகள், குறைந்தது இரண்டு மத்திய மேற்கு மேயர்களுடனான காதல் அல்லது பாலியல் உறவுகள் மூலம் தன்னுடைய தொடர்புகளை வளர்த்துக்கொண்டார் என கூறப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்த இந்த நடவடிக்கை, பீஜிங் தொடர்பான வெளியுறவு கொள்கை பிரச்சனைகளில் செல்வாக்கு செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீனாவின் ஆக்ரோஷமான அரசியல் தலையீடு நடவடிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளது.

அரசியல்வாதிகளுடன் எப்படி நெருக்கமானார்?

ஃபாங் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர் அமெரிக்காவில் இருந்தபோது அவருடைய வயது இருபதுகளின் கடைசி அல்லது முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. 2011 ஆம் ஆண்டில் பே ஏரியா பல்கலைக்கழகத்தில் மாணவராக சேர்ந்தார் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. பாங் ஆரம்பத்தில் தனது பல்கலைக்கழகத்தில் சீன-அமெரிக்க சங்கங்களின் தலைவரானதன் மூலம் தனக்கான முக்கியத்துவத்தை வளர்த்துக்கொண்டார். பின்னர் தன்னுடைய பதவியை பயன்படுத்தி அரசியல் வட்டாரங்களில் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார்.

How chinese spy make close tie with american politicians

தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் கொடுத்த தகவல்களின் படி, ஃபாங் பல ஆண்டுகளாக அவர் ஏற்பாடு செய்யும் உயர்மட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ள அரசியல் பிரமுகர்கள், வணிக நிர்வாகிகள் மற்றும் சீன தூதரக அதிகாரிகளை பாங் அடிக்கடி அழைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பிற முக்கிய நபர்களுடன் நெருக்கமாவதற்கு ஃபாங் அரசியல் கூட்டங்கள், குடிமை சமூக மாநாடுகள், பிரச்சார பேரணிகள் மற்றும் வளாக நிகழ்வுகளை அவர் பயன்படுத்தினார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். ஃபாங் தன்னுடைய பங்களிப்பின் மூலம் ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ்மென் எரிக் ஸ்வால்வெல், அப்போதைய ஃப்ரீமாண்டின் மேயரான பில் ஹாரிசன், காங்கிரஸின்வுமென் ஜூடி சூ மற்றும் இந்திய-அமெரிக்க காங்கிரஸ்காரர் ரோ கன்னா உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுடன் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

அமெரிக்க மேயர்களுக்கான பிராந்திய மாநாடுகளில் ஃபாங் தொடர்ச்சியாக கலந்துகொள்ள தொடங்கினார். இது நாடு முழுவதும் அரசியல்வாதிகளின் தொடர்பை ஏற்படுத்த அவருக்கு உதவிகரமாக இருந்துள்ளது. மத்திய மேற்கு நகரங்களின் குறைந்தது இரண்டு மேயர்களுடன் பாலியல் அல்லது காதல் உறவுகளிலும் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால் அது யார் என்பது குறித்த விவரங்களை உளவுத்துறை அதிகாரிகள் கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்தது இரண்டு அரசியல்வாதிகளுடன் பாலியல் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தார் என்பது எப்.பி.ஐ-ன் மின்னணு கண்காணிப்பில் தெரியவந்துள்ளது. என்னதான் அரசியல் வட்டாரங்களில் தொடர்ச்சியாக இயங்கி வந்தாலும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகம் அறியப்படவில்லை. அதிகபட்சம் அவர் ஒரு பணக்கார குடும்ப பின்னணி கொண்டவரும், வெள்ளை கலர் பென்ஸ் காரில் வலம்வர கூடியவர், போன்ற சாதாரண தகவல்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன.

சிக்கியது எப்படி ?

ஆக்சியோஸ் நடத்திய ஆய்வின் படி, அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக ஃபாங்கை கண்காணிக்க தொடங்கவில்லை. சான் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகத்தில் மற்றொரு இரகசிய தூதரை ஆய்வு செய்யும் போது ஃபாங் நடவடிக்கைகளை கவனிக்க தொடங்கினர். அரசியல் தகவல்களை சேகரிக்கும் குற்றச்சாட்டில் சந்தேகத்திற்குரிய நபரை பின்தொடர்ந்ததில் அவர் இந்த ஃபாங் பெண்ணை அடிக்கடி தொடர்பு கொண்டது தெரிய வந்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதன் பின்னரே எப்.பி.ஐ கண்காணிப்பு வளையத்திற்குள் ஃபாங் கொண்டுவரப்பட்டார். மேலும் அவர் அமெரிக்க அரசியல்வாதிகளுடன் நெருங்கி செல்வதன் மூலம் அரசியல் நடவடிக்கைகளில் தன்னுடைய செல்வாக்கை அதிகரிப்பது தெரிய வந்துள்ளதாக மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்க அரசியல்வாதிகளுடன் நெருக்கமாவதற்காகவே அவர் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டும் இருக்கிறார். இதன் மூலம் ஃபாங் சந்தேகத்திற்குரிய ஒரு மிஷனில் இருக்கிறார் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஃபாங்கின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து அமெரிக்காவின் மூத்த உளவுத்துறை அதிகாரிகள் அவரது நடவடிக்கைகள் குறித்து பல உள்ளூர் மற்றும் தேசிய அரசியல்வாதிகளை எச்சரித்துள்ளனர். அவர்கள் தங்கள் அலுவலகங்களில் உள்ள மற்ற சீன உளவாளிகளைப் பற்றியும் எச்சரிக்கை செய்துள்ளனர்.

திடீரென காணவில்லை:

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு ஃபாங் திடீரென மாயமாக மறைந்து போனது சீன உளவுத்துறைக்கு தகவல் சேகரிக்கும் நடவடிக்கையில் அவருடைய ஈடுபாட்டை மேலும் உறுதிப்படுத்தியது. ஜூன் 2015 இல் ஒரு நிகழ்ச்சிக்காக ஃபாங் வாஷிங்டனுக்கு பயணிக்கத் திட்டமிட்டிருந்தார், ஆனால் திடீரென சீனாவுக்குத் திரும்ப வேண்டும் என்று கூறி அதை எதிர்பாராத விதமாக ரத்து செய்தார் என்று அவருடன் அந்த வாஷிங்டன் செல்ல இருந்த ஒருவர் கூறியிருக்கிறார். அத்துடன் அவர் யாரையும் தொடர்பு கொள்ளவும் இல்லை. அணைத்து அரசியல் தொடர்புகளையும் துண்டித்துவிட்டார். பே ஏரியாவில் உள்ள அவருடைய பல அரசியல் தொடர்புகள் அமெரிக்காவிலிருந்து திடீரென வெளியேறியதில் ஆச்சரியப்படுவதோடு குழப்பமடைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.

அரசியல் நிகழ்வுகளில் அடிக்கடி ஃபாங்கைக் பார்த்திருக்கும் குபெர்டினோவின் முன்னாள் மேயர் கில்பர்ட் வோங், சீனா அத்தனையில் இருந்தும் அவருடைய முகத்தை மறைத்துவிட்டது என்றார். அன்று திடீரென சீனா திரும்புவதாக கூறிய ஃபாங் இன்றுவரை நாடு திரும்பவில்லை என முன்னாள் அதிகாரிகளும் அவருக்கு நெருக்கமானவர்களும் தெரிவித்துள்ளனர்.

என்ன திட்டம் :

இருப்பினும் ஃபாங் என்ன வகையான தகவல்களை தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கு கூறியிருப்பார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. ஆனால் எந்தவொரு முக்கியமான அல்லது வகைப்படுத்தப்பட்ட தகவல்களை பெற்று இருக்க மாட்டார் என்று தாங்கள் நம்புவதாக அதிகாரிகள் மேற்கோள்காட்டியுள்ளனர். இந்த விஷயம் குறித்து கூறியுள்ள அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் ஃபாங் வழக்கு மிகப்பெரிய விஷயம் என தெரிவித்துள்ளனர். ஏனெனில் அவர் முக்கியமானவர்களை அணுகியுள்ளார். அவர் அமெரிக்காவில் இருந்ததற்கு முக்கிய காரணம் அரசியல் உளவு தகவல்களை சேகரித்து சீனாவுக்கு அனுப்புவதன் மூலம், பீஜிங்கின் வெளியுறவு பிரச்சனைகளில் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒரு இரகசிய சீன உளவுத்துறை செயற்பாட்டாளருக்கு இடையிலான நெருக்கமான உறவுகள் சீன அரசாங்கத்திற்கு எதிரான முக்கிய முடிவெடுப்பவர்களின் கருத்தை திசைதிருப்ப வாய்ப்புகளை வழங்கும். சீனாவுடன் நேரடியாக தொடர்புடைய வெளியுறவுக் கொள்கை சிக்கல்கள், அல்லது உள்ளூர் முதலீடுகளுக்கு சீன நிறுவனங்களுடன் கூட்டுசேர்வது போன்ற நடவடிக்கையில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி செய்யும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒபாமா நிர்வாகத்தின் போது ஃபாங்கின் நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில், டிரம்பின் நிர்வாகத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது குறித்த பிரச்சனைகள் அமெரிக்காவிற்கு மேலும் கவலையை ஏற்படுத்தியது, அதேசமயம் அடுத்துவரும் ஜோ பிடன் நிர்வாகத்தில் அமெரிக்காவின் எதிர் புலனாய்வு நடவடிக்கைகள் முக்கிய காரணமாக அமையும்.

திடீரென பரவும் மூளையை உண்ணும் அமீபா.. பீதியில் இருக்கும் மக்கள்.. இன்னும் என்னவெல்லாம் இருக்கோ!

Deadly Brain-eating Amoeba start Spreading in America

வடக்கு அமெரிக்காவில் மூளையை தின்னும் அமீபா(Brain-eating Amoeba) திடீரென பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே மியூட்டேட் அடைந்த புதிய வகை கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் இப்போது இதுவும் அதனுடன் இணைந்துள்ளது.

2020 ஆம் ஆண்டு முடிய இன்னும் 9 நாட்கள் உள்ளன. கடந்த 11 மாதத்தில் உலகம் ஏறக்குறைய எல்லா வகையான கொடூர நிகழ்வுகளையும் மோசமான மரணங்களையும் ஆச்சர்ய நிகழ்வுகளையும் பார்த்துவிட்டது. இதுவரை பார்த்தது போதாது என்பது போல் வருடத்தின் இறுதியில் இப்போது மேலும் ஒரு அச்சுறுத்தல் உலக மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது.

கடந்த செப்டம்பரில் டெக்ஸாஸ் மாகாணத்தில் 6 வயது சிறுவன் இந்த அமீபா மூலம் ஏற்படும் நெக்லேரியா பவுலேரி எனும் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். அதன் பின்னர் தான் அந்த பகுதிக்கான பொது பயன்பாட்டு நீரில் இந்த அமீபா இருந்தது கண்டறியப்பட்டது. முன்பு அமெரிக்காவின் தெற்கு பகுதிகளில் மட்டும் அடிக்கடி கண்டறியப்பட்ட இவ்வகை அமீபா இப்போது வடக்கு மாகாணங்களிலும் பரவ தொடங்கியுள்ளது.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் படி, இந்த கேஸ்கள் மத்திய மேற்கு மாகாணங்களை நோக்கி பரவி வருகின்றன. அதேநேரம் குடிநீரில் இருந்தோ அல்லது மற்றவர்களிடம் இருந்தோ இந்த அமீபா பிறருக்கு பரவாது என உறுதிப்படுத்தியுள்ள நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், நீரில் இருந்து ஒருவரின் மூக்கு வழியாக உடலுக்குள் சென்று நேரடியாக மூளையை தாக்குகிறது என தெரிவித்துள்ளது.

நெக்லேரியா

ஒருசெல் உயிரியான இந்த நெக்லேரியா பவுலேரி அமீபா தொற்று மூலம் ஏற்படும் இந்த நோய்க்கு எசன்ஷியல் அமெபிக் மெனிங்கோயின்ஸ்பாலிடிஸ் என அழைக்கப்படுகிறது. இந்த வகை அமீபா பொதுவாக மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் வாழக்கூடியது. பொதுவாக பொதுமக்கள் அதிகம் புழங்கக்கூடிய நீச்சல் குளங்கள் போன்ற இடங்களில் இருந்து அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மூக்கு வழியாக நேரடியாக மூளைக்கு சென்று மூளையிலுள்ள திசுக்களைத் தாக்கும். ஆனால் இந்த உணர்வு மனிதர்களுக்கு தெரியாது. இதன் அறிகுறிகளாக கடுமையான ஒற்றை தலைவலி, கழுத்து வலி, தலைசுற்றல் மற்றும் வாந்தி, மனசோர்வு, குழப்பம், ஹாலோசினேஷன் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வளர்ந்து வரும் தொற்று நோய்கள் குறித்து வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், நெக்லேரியா பவுலேரி தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் பொழுதுபோக்கு நீர் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் அதிகரித்திருக்கலாம், ஏரி, குளம் போன்ற நன்னீர் போன்ற பகுதிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவவியிருக்கலாம் என்று கூறியுள்ளது. பொதுவாக கோடை காலமான ஜூன், ஜூலை, செப்டம்பர் போன்ற காலங்களில் தான் இதுவரை பரவியுள்ளது.

ஆனால் இப்போது குளிர் காலங்களில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. ஆனால் மிகவும் அரிதாக தான் இந்த பாதிப்பு இதுவரை ஏற்பட்டுள்ளது. கடந்த 2010 முதல் 2019 வரை இடைப்பட்ட காலத்தில் 34 பேருக்கு இந்த அமீபாவால் பாதிப்பு ஏற்பட்டது. 30அதில் பேருக்கு பொழுதுபோக்கு நீர்நிலைகளிலிருந்தே இந்த தொற்று ஏற்பட்டுள்ளது. .அமெரிக்காவில் 1962 – 2018 காலகட்டத்தில் 145 பேரை இந்த நோய் தாக்கியது. அதில் நான்கு பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர்.

இதில் மோசமான ஒரு தகவல் என்னவென்றால் ஓருவரின் உடலில் அமீபா இருப்பதைக் கண்டறிய எந்த சோதனையும் இதுவரை வடிவமைக்கப்படவில்லை. எனவே, நோயாளி அறிகுறிகளை வெளிப்படுத்த சில நேரங்களில் நீண்ட நாட்கள் ஆகலாம், இது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இப்போது இந்த பாதிப்பு அதிகரித்ததை தொடர்ந்து மக்கள் கவனமாக இருக்கும்படி அந்தந்த மாகாண சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், குழாய்கள், ஆறுகள், ஏரிகள், குளங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற பிற மூலங்களிலிருந்து பெறப்படும் தண்ணீருடன் நாசித் தொடர்பை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் உள்ளூர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ்.. அலறும் உலக நாடுகள்.. முழு தகவல்!

World has preparing for new mutated coronavirus. all you need to know

லண்டன்: மியூட்டேட் அடைந்திருக்கும் புதிய கொரோனா வைரஸ் வகை ஒட்டுமொத்த உலகையும் மீண்டும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இங்கிலாந்தில் தான் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இத்தாலியிலும் இந்த வகை வைரஸ் பாதிப்பால் இதுவரை 5 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சவுதி அரேபியா மீண்டும் அணைத்து வகையான சர்வதேச விமானங்களையும் ஒரு வாரத்திற்கு தடை செய்துள்ளது. லண்டன் முழுவதும் மீண்டும் கடுமையான ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விவாதிக்க இந்தியாவில் இன்று அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இப்படி உலகம் முழுவதிலும் மீண்டும் எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

மியூட்டேட் அடையும் வைரஸ்:

பொதுவாக வைரஸ்கள் இரண்டு வகைப்படும் ஒன்று டி.என்.ஏ வைரஸ் மற்றொன்று ஆர்.என்.ஏ வைரஸ். இதில் ஆர்.என்.ஏ வகை வைரஸ்கள் சூழலுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை படைத்தவை. இப்போது உலகம் முழுவதிலும் ருத்ரதாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் ஆ.என்.ஏ வகையை சேர்ந்தது. ஆரம்பத்தில் இருந்தே உலகம் முழுவதிலும் பலவகை கொரோனா வைரஸ் வகை பரவி வந்தது. இத்தாலியில் ஒரு வகை ஸ்ட்ரைன் மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு வகையும், அமெரிக்க உள்ளிட்ட நாடுகளிலும் ஒரு வகையும் பரவி வந்தது. ஆனால் இவை அனைத்திலும் பெரிய அளவில் வேறுபாடு கிடையாது. மரபணுக்களில் சிறு சிறு மாற்றங்கள் இருந்ததே தவிர பெரிய மாற்றங்கள் இல்லை. இங்கு தான் தற்போது இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை வைரஸ் வேறுபடுகிறது. தெற்கு இங்கிலாந்தில் பரவி வரும் இந்த வகை கொரோனா வைரஸில் நிறைய மரபணு மாற்றங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த புதுவகை ஸ்ட்ரைன் B.1.1.7 என அழைக்கப்படுகிறது. வுஹானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசை விட பல மாற்றங்களை கொண்டுள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸில் இருக்கும் கூம்பு போன்ற ஸ்பைக்கில் இருக்கும் புரதத்தில் பெருமளவு மாறுபாடு இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த கூம்பின் புரோட்டின் செல்கள் தான் அந்த வைரஸின் வலிமைக்கு மிக முக்கிய காரணம். மனித உடலுக்குள் வந்ததும், கொரோனா வைரஸில் இருக்கும் இந்த கூம்புகள்தான் உடலில் உள்ளே இருக்கும் செல்களை துளைத்துக் கொண்டு செல்கிறது. அதாவது இவை தான் மனித உயிரணுடன் தொடர்புகொள்ள முக்கிய காரணி. இதில் இருக்கும் புரோட்டின் செல்களில் தான் தற்போது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் மருத்துவ வைராலஜிஸ்ட் டாக்டர் ஜூலியன் டாங், “இன்ஃப்ளூயன்ஸா போன்ற வைரஸ்களுக்கு இது மிகவும் இயல்பானது என்றார். இது ஒரு கலப்பின வைரஸ் உருவாக வழிவகுக்கிறது. இது இயற்கையாக வைரஸ் மாறுபாடு அடையும் வழிகளில் ஒன்றாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

World has preparing for new mutated coronavirus. all you need to know

பரிசோதனையில் பாதிப்பை ஏற்படுத்துமா ?

இந்த புதிய வகை வைரஸில் இருக்கும் மாற்றங்களில் ஒன்று, வைரஸின் கூம்பில் இருக்கும் புரதங்கள் உருவாக்கும் அமினோ அமிலங்கள் வைரஸின் மரபணுவில் 6 முக்கிய தளங்களை நீக்குகிறது. உலகம் முழுவதும் நடைமுறையில் உள்ள பொதுவான கொரோனா வைரஸ் பரிசோதனை முறையான PCR சோதனையின் போது பயன்படுத்தும் மூன்று மரபணு இலக்குகளில் இதுவும் ஒன்றாகும். இதனால் சில நேரங்களில் சோதனைகளின் போது நெகட்டிவ் என்று கூட முடிவுகள் வருவதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற இரண்டு இலக்குகளை பயன்படுத்தி சோதனைகளை மேற்கொண்டால் பாதிப்பு ஏற்படாது என்று இங்கிலாந்தின் வெல்கம் சாங்கர் நிறுவனத்தின் SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் முன்முயற்சியின் இயக்குனர் டாக்டர் ஜெஃப்ரி பாரெட் கூறியுள்ளார்.

மருத்துவ உயிர் வேதியியல் மற்றும் ஆய்வக மருத்துவத்திற்கான சங்கத்தின் நுண்ணுயிரியல் நிபுணத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் ராபர்ட் ஷார்டென் கூறுகையில், ஆய்வகங்கள் எந்த மரபணுவை இலக்காக கொண்டுள்ளன என்பதையும், சோதனை செயல்திறனைச் சோதிப்பதில் விழிப்புடன் இருப்பதையும் அறிந்திருக்கின்றன. பொதுவாக PCR சோதனைகளின் போது ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணுக்களை இலக்காக கொண்டு எடுக்கப்படுவதால் இந்த புதிய மியூட்டேட் அடைந்த வைரஸ்களினால் பரிசோதனை முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றார்.

மிகவும் ஆபத்தானதா ?

இந்த புதிய வைரஸ் முந்தைய வகையை விட மிக வேகமாக பரவி வருவதாக பிரிட்டன் அரசாங்கம் சந்தேகிக்கிறது. ஆனால் விஞ்ஞானிகள் இதுகுறித்து முழுமையாக அறிந்துகொள்ள முயற்சிக்கின்றனர். ஒரு சிலர் பிரிட்டன் அரசாங்கத்துடன் உடன்படுகின்றனர். இருப்பினும் இந்த புதிய வகை வைரஸ் முன்பு பரவியதை விட எந்த ஒரு புதிய நோயையும் உருவாக்குகிறது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. வார்விக் மருத்துவ பள்ளியின் கவுரவ விரிவுரையாளர் டாக்டர் ஜேம்ஸ் கில் கூறுகையில், இதுபற்றி அறிய நாங்கள் காத்துகொண்டு இருக்கிறோம். இது மேலும் பெரிய தொற்றுநோயாக தெரிகிறது. ஆனால் இது ஆபத்து அதிகமானதா அல்லது குறைவானதா என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை என்றார்.

தடுப்பூசியை பாதிக்குமா ?

உலகம் முழுவதிலும் பல்வேறு தடுப்பூசிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கி மக்களுக்கு தடுப்பூசி விநியோகமும் தொடங்கிவிட்டன இந்த நிலையில் இப்போது புதிய வகை வைரஸ் வேகமாக பரவுவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தடுப்பூசிகள் மியூட்டேட் அடைந்த வைரசுக்கு எதிராகவும் செயல்படுமா என பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் வைரஸ் மியூட்டேட் அடைந்திருந்தாலும் அது தடுப்பூசியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது போன்ற எந்த காரணத்தையும் வல்லுநர்கள் கண்டறியவில்லை .

இங்கிலாந்து அரசாங்கத்தின் ஆலோசனைக் குழு புதிய மற்றும் வளர்ந்து வரும் வைரஸ் அச்சுறுத்தல் ஆலோசனைக் குழு இது தொடர்பாக ஒரு ஆய்வறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதில் தடுப்பூசி செயல்திறனைக் குறைக்கும் வகையில் எந்தவொரு வைரஸும் அல்லது வைரஸ் கூம்பில் இருக்கும் புரதத்தையும் நாங்கள் கண்டறியவில்லை. என்று தெரிவித்துள்ளனர். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி இந்த புதிய வகை வைரஸ்க்கும் எதிராக செயல்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய நிபுணர்கள் நம்புகின்றனர் என்று ஜெர்மனியின் சுகாதார அமைச்சரும் தெரிவித்துள்ளார்.

தமிழ் சூழலில் எடுக்கப்பட்ட புது முயற்சி.. பாவக்கதைகள் பேச வருவது என்ன ?

Paava kadhaigal movie review

தமிழ் சினிமாவில் ஆந்தாலஜி படங்கள் வருவது அரிது கிடையாது. ஏற்கனவே சில்லு கருப்பட்டி உள்ளிட்ட படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் நெட்ப்ளிக்ஸ் போன்ற ஆன்லைன் தளத்திற்காகவே முன்னணி இயக்குனர்கள் இணைந்து ஒரு படத்தை உருவாக்கியிருப்பது இது முதல்முறை என கூறலாம். நெட்ப்ளிக்ஸ் போன்ற தளங்களுக்கு ஒரு படம் அல்லது சீரிஸ் உருவாக்க வேண்டும் என்றாலே அதில் கண்டிப்பாக ஆபாச வார்த்தைகளை சேர்க்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக மாற்றிவிட்டனர் தமிழ் சினிமா இயக்குனர்கள். அந்த வகையில் பாவக்கதைகளும் விதிவிலக்கல்ல.

பிரபல முன்னணி இயக்குனர்களான வெற்றிமாறன், விக்னேஷ் சிவன், கவுதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்கரா உள்ளிட்ட இயக்குனர்கள் இணைந்து சாதி, ஆணவ கொலைகளை மையப்படுத்தி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தளத்திற்காக படம் எடுக்க இந்த இயக்குனர்களை அணுகியதுமே அவர்களுடைய முதல் தேர்வாக காதல் தான் இருந்துள்ளது. ஆனால் அவர்களை மாற்றியது வெற்றிமாறன் தான். இதுகுறித்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். காதல் போன்ற சாதாரண விவகாரங்களை வைத்து தான் எடுக்க வேண்டும் என்றால் தான் விலகி கொள்வதாக வெற்றிமாறன் தெரிவித்ததாகவும், அவரை இழக்க தங்களுக்கு விருப்பமில்லை என்றும் கூறியிருந்தார். அதன் பிறகே ஆணவ கொலைகள் குறித்த பேச முன்வந்துள்ளனர்.

Paava kadhaigal movie review

இனி படத்திற்குள் போகலாம், நால்வரின் படங்களுமே இந்த சமூகம் கட்டியெழுப்பிய கவுரவம் மீது எழுப்பப்படும் கேள்வியை எழுப்புகிறது. முதல் படம் சுதா கொங்கராவின் தங்கம். சாதிய கவுரவத்தை நேசிக்கும் தந்தையின் படித்த முற்போக்கான மகன் சாந்தனுவிற்கும், அடிப்படை இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த பெண் பவனி ஸ்ரீ இடையே மலரும் காதல் பற்றியது. ஆனால் அதை தாண்டி இந்த படத்தில் திருநங்கைகளின் பிரச்சனைகளை மையப்படுத்தி இருந்தார் இயக்குனர். எண்பதுகளில் நடக்க கூடிய இந்த கதையில் பவனி ஸ்ரீ அண்ணனாக சத்தார் வேடத்தில் மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் கச்சிதமாக பொருந்தியிருந்தார். திருநங்கைகளை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது, அந்த காலகட்டங்களில் அவர்கள் மீதான பார்வை எப்படி இருந்தது உள்ளிட்டவைகளை சுதா கொங்கரா பேசியிருந்தார். சில வசனங்கள் உண்மையில் சமூகத்தின் மீது விடுக்கப்பட்ட பெரும் கேள்வியாகவே இருந்தது. இந்த கதை ஏற்படுத்திய தாக்கத்தை விட ரசிகர்களிடம் காளிதாஸ் ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என்றே கூறலாம்.

Paava kadhaigal movie review

அடுத்து விக்னேஷ் சிவனின் லவ் பன்னா உட்றணும். அஞ்சலி, கல்கி கோச்சலின் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதில் சாதி ஆணவ கொலைகள், ஓர்பாலின உறவுகள் என எல்லாத்தையும் பேச முயன்று இருக்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால் இப்படியான சென்சிடிவ் தலைப்புகளில் கை வைக்கும் முன் அவை குறித்த அடிப்படை புரிதல்கள் அவசியமாக பார்க்கப்படுகிறது. ஒரு இடத்தில் அஞ்சலி லெஸ்பியன் ஆனதற்கு ஒரு காரணம் கூறுகிறார். ஆண்களிடம் பழகாமல் பெண்களிடமே பழகியதால் தான் இப்படி மாறி விட்டதாக தெரிவிக்கிறார். அப்படி பார்த்தல் இந்திய சமூக சூழலில் பல பெண்கள் லெஸ்பியன்களாக தான் இருக்க வேண்டி வரும். மற்றும் அவர்கள் குறித்த தவறான புரிதலையும் இது ஏற்படுத்திவிடும். மற்றும் தேவையே இல்லாத இடத்தில் சில ஆபாச வார்த்தைகளை வைக்கிறார். அந்த வார்த்தைகள் அனைத்தும் பெண்களை மையப்படுத்தி இருக்க கூடிய ஆபாச வார்த்தைகள். ஒரு சமூக கட்டமைப்பை உடைக்க எடுக்கப்படும் ஒரு படங்களில் அதே சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் வேறு ஒன்றை பயன்படுத்துவது இந்த படத்திற்கான அடிப்படையவே மாற்றி விடும் என்பது இயக்குனருக்கு புரியவில்லை.

Paava kadhaigal movie review

மூன்றாவது கவுதம் வாசுதேவ் மேனனின் வான்மகள். இதில் சிம்ரன், கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். சிறு பெண் குழந்தைகளின் மீதான பாலியல் கொடுமைகள் குறித்து பேசியிருக்கும் படம். ஒரு அழகான குடுபத்திற்குள் இப்படியான கோர நிகழ்வு எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது காட்டப்பட்டுள்ளது. ஆனால் முன்பு சொன்ன அதே புரிதல் குறைபாடு இதிலும் பல வசனங்களில் காணப்பட்டுள்ளது. பெண் உடல் கோவில் போன்றது வகையான வசனங்கள் எல்லாம் பல காலமாக உடைக்க வேண்டிய பர்னிச்சர் தான். அதை பயன்படுத்தியிருப்பதும், இவரும் பெண் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு இடத்தில் பெண்களை மையப்படுத்தி வரும் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதும் எந்த விதத்தில் கதைக்கு நியாயம் சேர்க்கும் என்பது தெரியவில்லை.

Paava kadhaigal movie review

கடைசியாக வெற்றிமாறனின் ஓர் இரவு. சாய் பல்லவி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். வழக்கம் போல ஒரு கவிதையில் கூற வேண்டிய விஷயத்தை படமாக மாற்றி அசத்தியிருக்கிறார். சாதி ஆணவ கொலையை மையப்படுத்தி எடுப்பதோடு நிற்காமல் அதன் தொடர்ச்சியையும் முடிவில் கூறியிருப்பது கதையை முழுமைப்படுத்தி இருந்தது. கீழ் ஜாதி பையனை காதலித்து, வீட்டை விட்டு ஓடிப்போன சாய் பல்லவியை 2 வருடங்களுக்கு பிறகு மண்ணித்து விட்டதாக கூறி வளைகாப்பு நடத்த சொந்த ஊருக்கு பிரகாஷ் ராஜ் அழைத்து வருவதில் கதை நகர்கிறது. பிரகாஷ் ராஜ் பற்றிய நடிப்பு அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும் அவரையே கவனிக்க முடியாத அளவிற்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார் சாய் பல்லவி.

இந்த நான்கு படங்களிலும் தெரிந்தோ தெரியாமலோ இருக்க கூடிய ஒரு ஒற்றுமை, இந்த கவுரவம், சாதி ஆணவம் உள்ளிட்டவற்றால் தவறு செய்பவர்களை சூழ்நிலை கைதிகளாகவும் பிறருடைய நிர்பந்தத்தால் செய்வது போன்றும் காட்டியுள்ளனர். விக்னேஷ் சிவன் இன்னும் கொஞ்சம் அதிகமாக சென்று ஒரு ஆணவக்கொலை நிகழ்த்தியவரை ஒரே வசனத்தில் அப்பாவியாக மாற்றியிருக்கிறார். இருந்த போதிலும் இது மாதிரியான விஷயங்களை துணிந்து எடுக்க தொடங்கியிருப்பதே தமிழ் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கான முயற்சியாக பார்க்கப்படுகிறது. சிறு சிறு புரிதல் குறைபாடுகளை தவிர்த்துவிட்டு பார்த்தல் பாவக்கதை நிச்சயம் தேவையான ஒன்று தான்.

இந்தியாவில் பெரும்பான்மையான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பமில்லை.. ஆய்வில் புதிய தகவல்

Most of the indians unwilling to take Covid-19 vaccine, says new survey

டெல்லி: குறைந்தது 69 சதவிகித இந்தியர்கள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ள தாயாராக இல்லை என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மக்களிடையே நிலவும் தவறான கருத்துக்கள் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது

உலகையே அச்சுறுத்த கூடிய கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தயாராகிவிட்டது. இந்தியாவில் செயல்படும் சீரம் நிறுவனமும் அடுத்தாண்டு இறுதிக்குள் 300 மில்லியன்க்கு மேற்பட்ட டோஸ்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு ஏற்கனவே பிரிட்டன், சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளும் அனுமதி வழங்கிவிட்டன. இந்தியாவிலும் பாரத் பயோடெக் உள்ளிட்ட சில தடுப்பூசி நிறுவனங்கள் அவசர ஒப்புதலுக்கு அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளன. அரசு ஒப்புதல் கிடைத்தவுடன் தடுப்பூசி விநியோகமும் தொடங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

ஒரு பக்கம் தடுப்பூசி நிறுவனங்கள் அதிகப்படியான உற்பத்தி, மற்றும் ஒப்புதலுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில் மறுபக்கம் அரசாங்கமும் விநியோகத்திற்காக மும்முரமாக தயாராகி வருகிறது. எல்லா மாநிலங்களில் இருந்தும் பட்டியல் மத்திய அரசிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தடுப்பூசியை வைக்க கூடிய இடங்கள், மக்களுக்கு செலுத்தக்கூடிய இடங்கள், முன்னுரிமை பெறுபவர்கள் யார் என்கிற விவரங்களும் தயார் செய்யப்பட்டு வருகின்றன.

இன்னும் சில வாரங்களில் தடுப்பூசி தயாராகிவிடும் என்று ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியும் கூறியிருந்தார். அடுத்தாண்டு தொடக்கத்திற்குள் எப்படியும் இந்தியாவிலும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

Most of the indians unwilling to take Covid-19 vaccine, says new survey

லோக்கல் சர்க்கிள் என்கிற சமூக வலைத்தளம் மூலம் நாடு முழுவதும் 242 மாவட்டங்களில் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இது தெரிய வந்துள்ளது. இந்த சர்வேயில் கலந்துகொண்டவர்களில் 34 சதவிகிதம் பேர் பெண்கள் 66 சதவிகிதம் பேர் ஆண்கள் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் சொல்லப்பட்டதை விட இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லை என கூறியவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 15 முதல் 20 வரை நடத்தப்பட்ட சர்வேயில் 61 சதவிகிதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பெரிய அளவில் விருப்பம் காட்டவில்லை. ஆனால் இப்போது மறுபடியும் டிசம்பர் 10 முதல் 15 வரை எடுக்கப்பட்ட சர்வேயில் 69 சதவிகிதம் பேர் விருப்பம் இல்லை என கூறியுள்ளனர்.

இதுகுறித்து கூறியுள்ள லோக்கல் சர்க்கிள் நிறுவனர் சச்சின் தபாரியா, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் மக்களிடம் இருக்கும் இந்த தயக்கங்களுக்கு பல காரணங்களை குறிப்பிட்டுள்ளார். பக்க விளைவுகள், செயல்திறன் நிலைகள், மற்றும் தங்களிடம் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக தங்களுக்கு பரவாது போன்ற நம்பிக்கைகளால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை என குறிப்பிட்டுள்ளார். மேலும் வாட்ஸ் அப்பில் வெளியாகும் பல்வேறு வதந்திகளும் மக்களை தவறான திசையில் வழி நடத்துகிறது. இந்தியாவில் நவம்பர் மத்தியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேஸ்கள் தினசரி பதிவாகியிருந்த நிலையில் தற்போது டிசம்பர் மத்தியில் அந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைந்துள்ளது. இதுவும் கூட மக்களின் விருப்பமின்மைக்கு காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசிகள் குறித்த போலி செய்திகளை அரசாங்கம் காற்றுப்படுத்த வேண்டும், மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துவதில் போலி செய்தகளுக்கு பெரும்பங்கு உண்டு. ஒவ்வொரு தடுப்பூசி பரிசோதனைகளின் முடிவுகள், சாதக பாதகங்களை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். சரியான நேரங்களில் வெளியாகும் மக்களிடையே முக்கியமானவை என்றும் தபாரியா தெரிவித்துள்ளார்.

இது இல்லாமல் சுகாதார நிபுணர்கள் தனியாக நடத்திய சர்வேயில் 45 சதவிகிதம் மக்கள் அரசாங்க ஒப்புதல் பெற்றவுடன் தடுப்பூசி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். 55 சதவிகிதம் மக்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதை தள்ளி வைப்பதில் அல்லது அதுகுறித்து இன்னமும் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். கொரோனா தடுப்பூசி குறித்த சுகாதார ஊழியர்களின் அணுகுமுறைகளைப் புரிந்துகொள்ள டாக்டர் அப்துல் கஃபூர் ஒருங்கிணைத்த இந்த ஆய்வுக்கு 1,424 பேர் பதிலளித்துள்ளனர். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறிப்பிடத்தக்க கவலைகளை வெளிப்படுத்துகின்றன மற்றும் சாத்தியமான தீர்வுகளையும் பரிந்துரைக்கின்றன என்று டாக்டர் கஃபூர் கூறினார்.